புதுச்சேரியில் மணக்குள விநாயகர் கோயில் யானை லக்ஷ்மிக்கு முதலாம் ஆண்டு நினைவஞ்சலி..! - கோயில் யானைக்கு முதலாம் ஆண்டு அஞ்சலி
Published : Nov 30, 2023, 9:10 PM IST
புதுச்சேரி: அருள்மிகு மணக்குள விநாயகர் கோயில் யானை லக்ஷ்மி கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு ஆசி வழங்கி மக்களின் மனதில் நீங்காதவாறு இடம் பிடித்தது. முன்னதாக, யானை லக்ஷ்மி கடந்த ஆண்டு நவ.30 ஆம் தேதி தனது வசிப்பிடமான ஈஸ்வரன் கோயில் வீதியிலிருந்து அதிகாலை நடைப்பயிற்சி சென்றபோது காமாட்சி அம்மன் கோயில் வீதியில் மயங்கி விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் யானை லக்ஷ்மி இறந்து ஓராண்டு ஆன நிலையில், புதுச்சேரி வனத்துறை அருகே இருக்கும் யானை லக்ஷ்மியின் நினைவிடத்தை மலர்களால் அலங்கரித்து, முதலாம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிவனடியார்கள் சிறப்புப் பூஜை செய்து புனித நீரை யானையின் நினைவிடத்தின் மீது ஊற்றிச் சிவ வாத்தியங்கள் முழங்க அஞ்சலி செலுத்தினர்.
மேலும், லக்ஷ்மி யானைக்கு பிடித்தமான ஆப்பிள், ஆரஞ்சு, அண்ணாச்சி, கொய்யா, உள்ளிட்ட பழங்கள் மற்றும் காய்கறிகள், கடலை மிட்டாய் ஆகியவற்றை வைத்து பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினார்கள். இதேபோன்று புதுச்சேரி அருள்மிகு மணக்குள விநாயகர் கோவில் நிர்வாகத்தின் சார்பிலும் அஞ்சலி செலுத்தப்பட்டு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.