பாம்பு கடித்து இருவர் உயிரிழப்பு - சாலை அமைக்கும் பணியைத் துரிதப்படுத்த 8 கிமீ நடந்து சென்ற கலெக்டர்! - ஆட்டுக்கொந்தரை
வேலூர்:அணைக்கட்டு ஒன்றியத்திற்கு உட்பட்ட அல்லேரிமலை அடுத்து உள்ளது, அத்தி மரத்து கொள்ளை மற்றும் ஆட்டு கொந்தரை ஆகிய மலைக் கிராமங்கள். இந்த கிராமத்தில் வசிக்கும் ஒன்றரை வயது குழந்தை தனுஷ்கா மற்றும் சங்கர் ஆகியோர், சில தினங்களுக்கு முன்பு பாம்பு கடித்து உயிர் இழந்தனர்.
இதன் காரணமாக அல்லேரி மலையில் சாலை அமைக்கும் பணியை விரைந்து முடிக்க அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். அதில் முதல் கட்டமாக அல்லேரி மலைப்பகுதியில் சாலை அமைப்பதற்காக வனத்துறை சார்பில் கொடுக்கப்பட்டுள்ள 3.28 ஹெக்டேர் நிலத்துக்குப்பதிலாக, 6.48 ஹெக்டேர் நிலமானது வருவாய்த் துறை மூலம் வனத்துறைக்கு அளவீடு செய்து கொடுக்கப்பட்டது. அதன்படி வருவாய்த்துறை அதிகாரிகள், வனத்துறையினருக்கு இடம் வழங்க வேலூர் காகிதப்பட்டறை பகுதியில் உள்ள மலையைத் தேர்வு செய்துள்ளனர்.
இந்நிலையில் அல்லேரி மலையில் சாலை அமைக்கப்பட உள்ள இடத்தை ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் இன்று (27.07.2024) 8 கி.மீ. நடந்து சென்று ஆய்வுசெய்தார். வரதலம்பட்டு மலைக்கிராம அடி வாரத்தில் இருந்து 8 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இந்த அல்லேரி மலையில், எந்த இடத்தில் தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும் என்பது குறித்துப் பார்வையிட்டார்.
மேலும் மழை நீர் சாலையை அடித்துச் செல்லாத வகையில் எவ்வாறு அதனை அப்புறப்படுத்துவது, வளைவுகளில் வாகனங்கள் திரும்பும் அளவிற்கு இட வசதி உள்ளதா என்பது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் ஆட்டுக்கொந்தரை பகுதியில் பாம்பு கடித்து இறந்த சங்கர் என்பவரின் மனைவி மகேஸ்வரியிடம் மாவட்ட ஆட்சியரின் விருப்ப உரிமை நிதியிலிருந்து 50 ஆயிரம் ரூபாய் காசோலையை மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் வழங்கினார்.