மனநலம் பாதித்த பீகார் இளைஞர் மீட்பு - சொந்த ஊர் செல்ல உதவிய ஆட்சியர்! - திருவள்ளூர்
திருவள்ளூர்:பீகார் மாநிலத்தை சேர்ந்த அமீர் என்பவர் பெங்களூர் கல்லூரி ஒன்றில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பயின்று வந்த நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பாக மனநலம் பாதிக்கப்பட்டு காணாமல் போனார். தகவல் அறிந்த பெற்றோர்கள் பீகார் காவல் நிலையத்தில் தனது மகன் காணவில்லை என்று புகார் அளித்தனர். இந்த புகாரின் பெயரில் கடந்த ஒரு மாதமாக திருவள்ளூர் மாவட்ட காவல்துறையினர் பீகார் மாநில இளைஞர் அமீரை தேடி வந்தனர்.
இந்த நிலையில், ஆவடி ரயில் நிலையத்தில் தங்கி இருந்த ஒருவர் மீட்பு குழுவினர்களால் கண்டெடுக்கப்பட்டார். அவர் பீகாரை சேர்ந்த அமீர் என்பது உறுதி செய்யப்பட்டது. இதுகுறித்து தகவல் மாவட்ட ஆட்சியருக்கு தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து மேனடோரா பவுண்டேஷன் என்ற அறக்கட்டளை அவரை மீட்டு அவருக்கு தேவையான முதல் உதவியை அளித்தது.
அதன் அடிப்படையில் அமீரின் அண்ணன் முஹம்மத் சல்மான் கான் மற்றும் குடும்பத்தினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. தொடர்ந்து முகமத் சல்மான் கான் தன் சகோதரரை நேரில் சந்தித்தார். இந்த சந்திப்புக்கு உதவிய திருவள்ளூர் மாவட்ட ஆட்சியருக்கு முகமத் சல்மான் கான் நன்றி தெரிவித்தார்.
மேலும் மாவட்ட ஆட்சியர் பீகார் மாநில இளைஞருக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்பு அளித்ததுடன் ஹாட் சேர் அலுவலக அறையில் அவர்களுடன் கலந்துரையாடினார். அதுமட்டுமின்றி மனநலம் பாதிக்கப்பட்ட அமீரின் குடும்பத்திற்கு அவரது சொந்த மாநிலமான பீகாரில் வாழ்வாதாரத்தை மேற்கொள்ள வேலையும் வாங்கித் தருவதாக மாவட்ட ஆட்சியர் உறுதியளித்தார்.