பண்ணாரி அம்மன் கோவிலில் ரூ.62.82 லட்சம் உண்டியல் காணிக்கை வசூல்!! - ஈரோடு மாவட்ட செய்தி
ஈரோடுமாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள அடர்ந்த வனப்பகுதியில் பிரசித்தி பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் பண்டிகை நாட்கள், அரசு விடுமுறை நாட்கள், மற்றும் விஷேச நாட்களில் அதிக பக்தர்கள் கூட்டம் காணப்படும். இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான இந்த கோவிலில் மாதம் தோறும் உண்டியல் காணிக்கை எண்ணப்படுவது வழக்கம்.
அதன்படி பண்ணாரி அம்மன் கோவில் துணை ஆணையர் மேனகா, சங்கமேஸ்வரர் கோவில் உதவி ஆணையர் சுவாமிநாதன் மற்றும் கோயில் பரம்பரை அறங்காவலர்கள் முன்னிலையில் உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது.
ராஜன் நகர் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஊழியர்கள், கோவில் பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இதில் ரூ.62 லட்சத்து 82 ஆயிரத்து 283 ரொக்கமும், 380 கிராம் தங்கமும், 4633 கிராம் வெள்ளியும் இருந்ததாக கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கோமாவில் இருக்கும் வேட்டை தடுப்பு காவலர்.. சிகிச்சைக்கு பணமின்றி தவிப்பு!