Chandrayaan-3:நிலவில் தரையிறங்கிய லேண்டர்! - கோவையில் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
Published : Aug 23, 2023, 10:13 PM IST
கோவை: சந்திரயான் -3 விண்கலத்தில் இருந்து விக்ரம் லேண்டர் நிலவின் தென்பகுதியில் வெற்றிகரமாக இன்று (ஆக.23) தரையிறங்கியது. மென்மையான தலையிறக்கம் முறையில் தரையிறக்கப்பட்ட அந்த நிகழ்வை இந்தியா உள்பட பல்வேறு நாடுகள் பார்த்து மகிழ்ந்தனர். இந்நிகழ்வு குறித்து பல்வேறு பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு விளக்கம் அளிக்கும் நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.
அதுமட்டுமின்றி விக்ரம் லேண்டர் (vikram lander) எவ்வித அசம்பாவிதமும் ஏற்படாமல் வெற்றிகரமாக நிலவின் தென்பகுதியில் தரையிறங்க வேண்டுமென பல்வேறு மக்கள் பிரார்த்தனைகள் மேற்கொண்டனர். இதைத்தொடர்ந்து, நிலவின் தென் துருவப்பகுதியில் வெற்றிகரமாக சந்திரயான் -3 விண்கலத்தின் லேண்டர் தரையிறங்கியது. அந்நிகழ்வின் தகவல்கள் புகைப்படங்கள், வீடியோக்களை இஸ்ரோ (ISRO) பகிர்ந்துள்ளது. அவை பல்வேறு இடங்களில் ஒளிப்பரப்பும் செய்யப்பட்டது.
இந்நிலையில், கோவை மாநகராட்சி நிர்வாகம் சார்பில் ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள ஒளித்திரை டவரில் அந்நிகழ்வு ஒளிப்பரப்பு செய்யப்பட்டது. இதனை பொதுமக்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் என 500-க்கும் மேற்பட்டோர் பார்த்து மகிழ்ந்ததோடு கைத்தட்டி வெற்றியை கொண்டாடினர். இதில் சிலர் குழந்தைகளுடன் வந்து இதனை ஆர்வமுடன் கண்டுகளித்தனர்
அதில், ஒரு முதியவர் 'வந்தே மாதரம்' முழக்கமிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். மற்றொரு நபர் கையில் தேசிய கொடி ஏந்தியபடி ‘பாரத் மாதா கீ ஜெய்’ முழக்கங்களை எழுப்பினார். இவ்வாறு இவ்விருவரும் தங்களது நாட்டுப்பற்றை வெளிபடுத்திய நிலையில், அங்கிருந்த அனைவருக்கும் மெய்சிலிர்த்தது. மேலும், டவுன்ஹால் பகுதியைச் சேர்ந்த நந்தன கிருஷ்ணன் என்ற 8 ஆம் வகுப்பு மாணவன் பொதுமக்களுக்கும், காவலர்களுக்கும் இனிப்புகளை வழங்கி இந்த மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார்.