அலுவலர்களுடன் இணைந்து நடனமாடிய கோவை ஆட்சியர் கிராந்தி குமார்.. பொங்கல் கொண்டாட்டம் கோலாகலம்! - ஆட்சியர் நடன வீடியோ
Published : Jan 13, 2024, 10:47 AM IST
கோயம்புத்தூர்: தமிழர் திருநாளான பொங்கல் திருநாள், தமிழகத்தில் வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. பொங்கல் திருநாளை முன்னிட்டு, தமிழ்நாட்டில் பல்வேறு தனியார் மற்றும் அரசு கல்லூரி, அலுவலகங்களில் நமது பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையில், பொங்கல் பண்டிகை பாரம்பரிய உடை அணிந்தும், நடனம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளுடன் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பொங்கல் விழாவானது வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள ஊழியர்கள் அனைவரும் இணைந்து பொங்கல் கொண்டாடினர். வண்ண கோலமிட்டு, மண்பானையில் பொங்கல் வைத்து கரும்பு மற்றும் தோரணம் கட்டி பொங்கலைக் கொண்டாடினர்.
பின்னர் மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி, கோலங்களை ஆய்வு செய்து சிறப்பாக கோலம் வரைந்தவர்களுக்கு மதிப்பெண் வழங்கினார். அதன் பிறகு கடவுள் வழிபாடு செய்து, பசுமாடு மற்றும் அதன் கன்றுகளுக்கு பூஜை செய்து உணவு அளிக்கப்பட்டது. மேலும் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.
அதிலும், ஏராளமான ஊழியர்கள் கலந்து கொண்டு உற்சாகமாக விளையாடினர். கலாச்சாரத்தை போற்றும் வகையில் பொங்கல் விழாவானது விமர்சையாக நடைபெற்றது. இந்நிகழ்வில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஜமாப் இசைக்கு மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார், அனைத்து அரசு அலுவலர்களுடன் இணைந்து நடனம் ஆடியது அனைவரையும் வியக்கச் செய்தது.