பென்சில் நுனியில் மாஸ்க் செய்து விழிப்புணர்வு.. கோவை ஆட்டோ ஓட்டுநர் அசத்தல்! - Corona infection
கோவை: பொதுமக்களிடையே முகக்கவசம் அணிவதன் அவசியம் குறித்தும், விழிப்புணர்வு ஏற்படுத்தவும் கோவை காந்திப்பார்க் பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் சுந்தரராஜ் பென்சில் முனையில் முகக்கசவம் போன்ற கிராஃப்ட் ஒன்றை உருவாக்கி உள்ளார்.
கோவையில் கரோனா தொற்று மீண்டும் அதிகரிக்க துவங்கி உள்ள நிலையில் பொதுமக்களிடையே முகக்கவசம் அணிவதன் அவசியம் என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த எண்ணினார் ஆட்டோ ஓட்டுநர் சுந்தரராஜ் . அதற்காக பென்சிலின் முனையில், முகக்கவசத்தின் வடிவத்தையும் அதன் கீழ் WEAR MASK என்ற வார்த்தையையும் செதுக்கியுள்ளார்.
மேலும் முகக்கவசம் அணிவது கட்டாயம் என அவரது ஆட்டோவில் ஏறும் அனைத்து பயணிகளுக்கும் வலியுறுத்தியும் வருகிறார். முகக்கவசம் இல்லாமல் அவரது ஆட்டோவில் பயணிக்கும் பயணிகளுக்கு முகக்கவசத்தையும் அவர் வழங்கி வருகிறார். இவர் இதேபோன்று பென்சிலின் முனையில் விலங்குகளையும், மனிதர்களையும், பெயர்களையும் செதுக்கியுள்ளார். அவரது ஆட்டோவில் வைக்கப்பட்டுள்ள I LOVE AUTO என்ற மினி கிராஃப்ட் அனைவரையும் வெகுவாக கவர்ந்துள்ளது. ஆட்டோ ஓட்டுநர் சுந்தரராஜிக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.