அரசு - தனியார் பேருந்து ஊழியர்களிடையே மோதல் - பேருந்தை யார் முதலில் இயக்குவது என்பதில் பிரச்சினை!
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகா மயிலாடும்பாறை கிராமத்தில் நேரம் பிரச்னை காரணமாக தனியார் மற்றும் அரசுப் பேருந்து ஓட்டுநர்களிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வருகிறது. இதனால், தனியார் பேருந்துக்கு பின்னால் அரசுப் பேருந்துகள் இயக்க வேண்டும் என சமரசம் செய்யப்பட்டது.
ஆனால், கடந்த சில நாள்களாக, அரசுப் பேருந்துகள் தனியார் பேருந்துக்கு முன்னதாகவே இயக்கப்பட்டதாக தெரிகிறது. இந்நிலையில் இன்று தனியார் பேருந்துக்கு முன்னதாக சென்ற அரசுப் பேருந்தை தனியார் பேருந்து ஊழியர் ஒருவர் மறித்து தகராறில் ஈடுபட்டார்.
சில நிமிடங்கள் அமைதியாக பேருந்தில் அமர்ந்திருந்த அரசுப் பேருந்து ஓட்டுநர் திடீரென பேருந்தில் இருந்து இறங்கி, தனது சட்டையை கழற்றி சண்டைக்கு வரும்படி தனியார் பேருந்து ஊழியர்களிடம் அழைப்பு விடுத்தார். மேலும், அவர்களுக்கு வாக்குவாதம் அதிகரித்து மோதல் ஏற்படும் அபாயம் உருவானது.
இந்த தகராறு குறித்து தகவலறிந்த மயிலாடும்பாறை காவல் துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர், தனியார் பேருந்து ஊழியர்கள் மற்றும் அரசுப் பேருந்து ஓட்டுநர்கள் இடையே சமரசம் செய்து அனுப்பி வைத்தனர். சாலையின் நடுவே பேருந்தை நிறுத்திவிட்டு மோதலில் ஈடுபட்ட பேருந்து ஓட்டுநர்களால் பேருந்து பயணிகள் குறித்த நேரத்தில் செல்ல முடியாமல் பெரும் அவதிக்கு உள்ளாகினர்.
இதையும் படிங்க:கம்பன் விழாக்கள் அரசு மூலம் நடத்தப்பட வேண்டும்- புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன்