வண்ண விளக்குகளால் ஜொலித்த தேவாலயங்கள்..கோவையில் களைகட்டிய கிறிஸ்துமஸ் பண்டிகை
Published : Dec 25, 2023, 9:32 AM IST
கோயம்புத்தூர்: உலகம் முழுவதும் இயேசு நாதரின் பிறந்த நாளான இன்று (டிச.25) கிறிஸ்துமஸ் பண்டிகை மிகவும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், கிறிஸ்துமஸ் பண்டிகையை (Christmas festival) முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள தேவாலயங்களில் நள்ளிரவில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இதையொட்டி, தேவாலயங்கள் அனைத்தும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.
இதன் ஒருபகுதியாக, கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள புனித மைக்கேல் தேவாலயத்தில் நள்ளிரவு சிறப்பு திருப்பலி நிகழ்வானது நடத்தப்பட்டது. இந்த சிறப்புத் திருப்பலியை கோவை மறை மாவட்ட ஆயர் தாமஸ் ஆக்வினஸ் துவக்கி வைத்தார். குழந்தை இயேசுவின் உருவபொம்மையை அனைவரிடமும் தூக்கிக் காட்டி குழந்தை இயேசுவின் பிறப்பை தேவாலயத்தில் அறிவித்தார். பின்னர் அதனை, குடிலில் வைத்த பின் ஆராதனைகள் மற்றும் சிறப்பு திருப்பலி நிகழ்வு நடத்தது. இந்த சிறப்பு பிரார்த்தனை நிகழ்வில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பங்கேற்றனர்.
முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய மறை மாவட்ட ஆயர் தாமஸ் அக்குவினாஸ், "ஆண்டவர் மனித அவதாரம் எடுத்தநாள் இன்று. நாட்டில் சமாதானம், அமைதி நிலவ வேண்டும், போராட்டங்கள் போர் போன்றவை ஒழிய வேண்டும். இந்த புத்தாண்டு அனைவருக்கும் சமாதானம் நிறைந்த ஆண்டாக அமைய வேண்டும் என இந்த சிறப்பு திருப்பலியில் வேண்டுதல் செய்யப்படுகிறது" என்றார்.
மேலும், கிறிஸ்துமஸ் பண்டிகையினை உற்சாகமாக கொண்டாடி வருவதாகவும், கிறிஸ்துமஸ் கேக்கை ஒருவருக்குக்கொருவர் பரிமாறிக்கொண்டும், பரிசுப் பொருட்களை பரிமாறிக்கொண்டு சிறப்பாக பண்டிகையினை கொண்டாட இருப்பதாக தேவாலயத்திற்கு வந்திருந்த கிறிஸ்தவர்கள் தெரிவித்தனர்.