சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோயிலில் சித்திரை பெருவிழா தேரோட்டம் - சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோயிலில்
கன்னியாகுமரி:திருவிதாங்கூர் மன்னர்கள் கால வரலாற்று சிறப்பு வாய்ந்த கோயில்களில் கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் அருள்மிகு தாணுமாலயன் சுவாமி கோயிலிலும் ஒன்று. அத்திரி முனிவரும், அவருடைய மனைவியும் கற்புக்கரசி அனுசுயாதேவியும் சுசீந்திரத்தில் தவம் செய்தனர்.
அத்திரி முனிவர் தவம் முடிந்து இமயமலைக்கு சென்றபோது, அனுசுயாதேவியின் கற்பை சோதிக்க எண்ணி பிராமணர் வேடத்தில் சிவபெருமான், விஷ்ணு, பிரம்மா ஆகிய மூன்று பேரும் வந்து பசிக்கு உணவளிக்குமாறு கேட்டதும், அதே நேரத்தில் ஆடையணிந்த ஒருவரால் தாங்களுக்கு உணவு பறிமாறினால் உண்ணமாட்டோம் எனவும் கூறினர்.
இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அனுசுயா தேவி தன் கணவர் திருவடி கழுவிய நீரை மூவர் மீதும் தெளித்தபோது சிவபெருமான், விஷ்ணு , பிரம்மா ஆகிய மூன்று பேரும் பச்சிளம் குழந்தைகளாக மாறியுள்ளனர்.
இதனை அறிந்த மூவரின் மனைவியரும் கணவர்களை பழைய நிலைக்கு மாற்றித் தர வேண்டியுள்ளனர். தேவியர்கள் வேண்டுகோளுக்கு இணங்கிய அனுசுயா முப்பெரும் கடவுளுக்கு பழைய உருவத்தை கொடுத்துள்ளார். அந்த நேரம் திரும்பி வந்த அத்திரி முனிவரும் அனுசூயா உடன் சேர்ந்து மும்மூர்த்திகளின் காட்சியை கண்டு அருள் பெற்றனர். இதுவே இக்கோயிலின் தல வரலாறாக கூறப்படுகிறது.
இத்தகைய சிறப்புமிக்க இக்கோயிலுக்கு தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் உள்ள பக்தர்களும் வந்து செல்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் இக்கோயிலில் சித்திரை, ஆவணி, மார்கழி, மாசி ஆகிய நான்கு மாதங்களில் 10 நாளுக்கு நடக்கும் திருவிழாவின் ஒருபகுதியாக, இந்தாண்டு சித்திரை திருவிழா கடந்த 21ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
திருவிழாவில் ஒன்பதாவது நாளான இன்று (ஏப்.29) பெருந்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நடைபெற்றது. இதில் குமரி மாவட்டம் மட்டுமின்றி, கேரளாவில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தந்து தேரை வடம் பிடித்து இழுத்தனர். இன்று இரவு 9 மணிக்கு ரிஷப வாகனத்தில் சாமி வீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.
திருவிழாவின் நிறைவு விழாவான நாளை இரவு 8 மணிக்கு முக்கிய நிகழ்ச்சியான தெப்பத்திற்கு சுவாமி, அம்பாள், பெருமாள், எழுந்தருளி தெப்பத்திருவிழா நடைபெறும், மூன்று முறை தெப்பத்தில் வளம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளிக்க உள்ளனர். அன்று இரவே ஆறாட்டு நிகழ்ச்சியுடன் சித்திரை தெப்பத் திருவிழா நிறைவுக்கு வருகிறது.