தஞ்சை பெரியகோயிலில் சித்திரை திருவிழா துவங்கியது! - தஞ்சை பெரியகோயில் சித்திரை திருவிழா
தஞ்சாவூர்:தஞ்சை பெரிய கோயில் என்றிழைக்கப்படும் அருள்மிகு பெரியநாயகி அம்மன் உடனுறை ஸ்ரீபெருவுடையார் திருக்கோயில் உலகப் பிரசித்தி பெற்ற கோயிலாகும். இக்கோயில் கட்டிடக் கலைக்கு எடுத்துக்காட்டாய் திகழ்வதோடு உலக பாரம்பரிய சின்னமாகவும் சிறந்து விளங்குகிறது. இக்கோயிலில் ஆண்டுதோறும் சித்திரைத் திருவிழா வெகு சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.
அதன்படி இவ்விழா துவஜாரோகணம் எனும் கொடியேற்றத்துடன் இன்று சிறப்பாகத் தொடங்கியது. முன்னதாக அதிகாலை பெரியகோயிலில் உள்ள பிரமாண்ட கொடிமரத்திற்கு மஞ்சள், பால், சந்தனம், தயிர் உள்ளிட்ட அபிஷேக பொருட்களைக் கொண்டு சிவாச்சாரியார்களால் வேத மந்திரங்கள் முழங்க அபிஷேகம் நடைபெற்றது.
பின்னர் ஸ்ரீ விநாயகர், ஸ்ரீவள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணியர், சந்திரசேகரர் அம்பாள், சுக்கிரவார அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்ச மூர்த்திகளுடன் ஸ்ரீ சந்திரசேகரர் புறப்பாடாகி கொடிமரம் முன்பு எழுந்தருளி பின்பு கொடிமரத்தில் நந்தி உருவம் பொறித்த கொடிக்குப் பூஜைகள் செய்யப்பட்டு, மங்கல இசை, சிவகணங்கள் இசைக்க, சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க, ஓதுவார்கள் திருமுறை ஓதி கொடிமரத்தில் கொடி ஏற்றப்பட்டு மஹாதீபாரதனை காட்டப்பட்டது.
மேலும் 18 நாட்கள் நடைபெறும் இந்த சித்திரை திருவிழாவில் தினமும் மாலை பல்வேறு வாகனங்களில் சுவாமி புறப்பாடும் நடைபெறுகிறது. இவ்விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற மே 1-ந் தேதி நடைபெற உள்ளது.