போலி மெஷினை வைத்து வழக்கு போடும் போலீஸ்... வாகனவோட்டி கடும் குற்றச்சாட்டு.. - குடிக்காமலேயே குற்றம்சாட்டும் போலீஸ்
சென்னை சாலிகிராமம் பகுதியை சேர்ந்தவர் தீபக். இவர் நேற்றிரவு (மார்ச் 27) தனது காரில் ராயப்பேட்டைக்கு சென்றுவிட்டு தேனாம்பேட்டை மகாராஜா சூர்யா சாலை வழியாக மீண்டும் சாலிகிராமம் திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது, அங்கு வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த சட்டம் ஒழுங்கு போலீசாரான உதவி ஆய்வாளர் இளங்கோ மற்றும் காவலர் ரஞ்சித் இருவரும், அந்த காரை மடக்கி தீபக் மது அருந்தியுள்ளாரா என்பதை பிரீத் அனலைசர் கருவி மூலம் சோதனை செய்தனர்.
இதையடுத்து அவர் மது அருந்தி இருப்பதாகவும், வயிற்றில் 45 சதவிகிதம் ஆல்கஹால் இருப்பதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். இதைக்கேட்ட தீபக், தனக்கு குடிபழக்கமே இல்லை என்றும் மெஷின் தவறுதலாக காண்பிப்பதாகவும் கூறி உதவி ஆய்வாளர் இளங்கோவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
அதன் பின் போலீசார், பைன் கட்டிய பின்பு காரை எடுத்து செல்லுமாறு அவரிடம் தெரிவித்துள்ளனர். இருப்பினும், தீபக் தன்னை மருத்துவமனைக்கு கொண்டு சென்று பரிசோதனை செய்யுங்கள் என்று மீண்டும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் போலீசார் வேறு 2 பிரீத் அனலைசர் கருவிகளை பயன்படுத்தி தீபக்கிடம் மீண்டும் சோதனை செய்த போது, 0% ஆல்கஹால் என்று காண்பித்ததால் போலீசார் குழப்பம் அடைந்தனர்.
இதையடுத்து போலீசார் தீபக்கை சமாதானபடுத்தி அங்கிருந்து அனுப்பி வைத்தனர். இந்த நிலையில், தீபக் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக தீபக்கும் விளக்கமாக ஒரு வீடியோவை பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவின் அடிப்படையில் விசாரணை நடைபெற்று வருவதாக போக்குவரத்து கூடுதல் ஆணையர் கபில் குமார் சரத்கர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:வாகன தணிக்கையில் வாக்குவாதம்.. உதவி ஆய்வாளரை தாக்கிய வழக்கறிஞர் கைது