'கூலிப், ஹான்ஸ் இல்லையா..' பட்டா கத்தியைக் காட்டி அடாவடி செய்த இளைஞர்களுக்கு வலைவீச்சு - CCTV footage of the Youths who ran away
சென்னை:ஐஸ் ஹவுஸில் இருந்து பெசன்ட் நகர் செல்லும் சாலையில் ரவி நியூஸ் மார்ட் என்ற கடை நடத்தி வருபவர், பொன்னி. இந்த நிலையில், இவரின் கடைக்கு நேற்று முன்தினம் (மே 17) இருசக்கர வாகனத்தில் இரண்டு இளைஞர்கள் வந்தனர். அவர்களில் ஒருவர் ஹான்ஸ் மற்றும் கூலிப் என்ற போதைப் பொருட்களைக் கேட்டுள்ளதாகத் தெரியவருகிறது. இதனையடுத்து கடைக்காரர் பொன்னி, அவைகளையெல்லாம் இல்லை என்று பதிலளித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த இரண்டு இளைஞர்களும் தாங்கள் இடுப்பில் மறைத்து வைத்திருந்த பட்டாக் கத்தியை வெளியே எடுத்து, அக்கடையில் இருந்த பொருட்களை எல்லாம் அடித்து நொறுக்கி கடையை துவம்சம் செய்துள்ளனர்.
இதனால் செய்தவறியாத அக்கடைக்காரர் இதனைத் தட்டிக் கேட்டதற்கு, அப்பெண்ணையும் தங்களின் கத்தியால் தாக்க முயன்றனர். இதனையடுத்து கடைக்காரர் பொன்னி லேசான காயங்களுடன் எழுப்பிய கூச்சலைக் கேட்டு, அங்கு அக்கம்பக்கத்தினர் கூடியதால், அந்த இரண்டு இளைஞர்களும் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
இது குறித்து மெரினா காவல்நிலையத்தில் அளிக்கப்பட்டப் புகாரின் அடிப்படையில், அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தனது கடையில் போதைப் பொருட்கள் விற்பதில்லை எனக் கூறிய பெண்ணை இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு இளைஞர்கள் பட்டாக் கத்தியால் தாக்க முயன்ற சம்பவம் அப்பகுதியில் உள்ள பிற கடைக்காரர்களிடமும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.