ரயிலில் தவறவிட்ட 6 வயது சிறுவனை மீட்டு தாயிடம் ஒப்படைத்த காவல் துறையினருக்கு குவியும் பாராட்டு! - காவலர் பிரசாத்
சென்னை: தாம்பரம் அடுத்த பெருங்களத்தூர் ரயில் நிலையத்திற்கு செங்கல்பட்டு செல்வதற்காக கண்டிகை பகுதியை சேர்ந்த கிரிஜா என்ற பெண் தனது 6வயது குழந்தை ஜீவாவுடன் இன்று ( ஆகஸ்ட் 7) வந்திருந்தார்.
இந்நிலையில் செங்கல்பட்டு ரயில் நடைமேடை வந்த உடன் ஜீவாவை முதலில் ரயிலில் ஏற்றிவிட்டு, பின்னர் கிரிஜா ஏற முயன்றுள்ளார். அப்போது கூட்ட நெரிசல் காரணமாக கிரிஜா ஏறுவதற்குள் ரயில் புறப்பட்டுள்ளது. இதனால் பதட்டம் அடைந்த தாய் ரயில் நிலையத்தில் கதறி அழுதுள்ளார்.
இதனை கண்ட பொதுமக்கள் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படையை சேர்ந்த முருகலிங்கம், ரயிலில் பாதுகாப்பு பணியில் இருந்த இரண்டாம் நிலை காவலர் பிரசாத் என்பவருக்கு தகவல் தெரிவிக்க அவர் உடனடியாக சிறுவன் ஜீவாவை வண்டலூர் ரயில் நிலையத்தில் இறக்கி கடற்கரை மார்க்கமாக வந்த ரயிலில் அழைத்து வந்து தாயிடன் ஒப்படைத்தார்.
குழந்தையை பார்த்த தாய் கண்ணீர் மல்க கதறி அழுது தன் மகனை கட்டி அணைத்துக் கொண்டார். பின்னர் சிறுவனை மீட்டு அழைத்து வந்த காவல்துறையை சேர்ந்த பிரசாத்திற்கு நன்றி தெரிவித்தார். ரயில் நிலையத்தில் இருந்த காவல்துறையினருக்கு பொதுமக்களும் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.