சென்னை எல்ஐசி கட்டடத்தில் தீ விபத்து: எல்இடி பலகையில் மின்கசிவு? - எல்இடி திரையில் மின்கசிவு
சென்னை: சென்னை மாநகரின் முக்கிய அடையாளங்களில் ஒன்று எல்ஐசி கட்டடம். அண்ணா சாலையில் கடந்த 70 ஆண்டுகளாக, 14 தளங்களுடன் கூடிய கட்டத்தில் எல்ஐசி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று (ஏப்ரல் 2) மாலை, திடீரென கட்டடத்தில் மேல் தளத்தில் தீப்பற்றியது.
மளமளவென பரவிய தீயால் கரும்புகை சூழ்ந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதைக்கண்ட அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து உடனடியாக தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் தேனாம்பேட்டை தீயணைப்பு நிலையத்தில் இருந்து வந்த தீயணைப்புத்துறை வீரர்கள், ராட்சத ஏணிகளின் உதவியுடன் கட்டடத்தின் மேல் பகுதியில் பிடித்த தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். பிற பகுதிகள் தீ பரவாமல் தடுக்கும் பணியை மேற்கொண்டனர்.
இச்சம்பவம் குறித்து அண்ணாசாலை போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையின் அடிப்படையில், எல்ஐசி கட்டடத்தின் மேல் பகுதியில் பொருத்தப்பட்டுள்ள எல்இடி பெயர் பலகையில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்துள்ளது. தொடர்ந்து இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என கூறப்படுகிறது.
இதையும் படிங்க: சென்னையில் வேலை வாங்கி தருவதாகக் கூறி ரூ.17 லட்சம் மோசடி; இருவர் கைது!