இருசக்கர வாகனத்தில் வந்து சைக்கிள் திருட்டு - சிசிடிவி கேமராவில் சிக்கிய நபர்கள்! - etv bharat tamil news today
வேலூர்மாவட்டம் குடியாத்தம் அடுத்த நத்தம் செல்லும் சாலையில் உள்ள பொன்னியம்மன் கோவில் அருகே ராஜசேகர் என்பவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில் ராஜசேகர் குடும்பத்தினர் அனைவரும் வீட்டினுள் இருந்த போது, பட்டப்பகலில் இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு மர்ம நபர்கள், அவரது வீட்டிற்கு உள்ளே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சைக்கிளை திருடிச் சென்றனர்.
இதனையடுத்து ராஜசேகர் வீட்டிற்கு வெளியே வந்து பார்த்த போது வீட்டிற்குள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சைக்கிள் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் வீட்டிற்குள் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தபோது இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு மர்ம நபர்கள் சைக்கிளை திருடிச் செல்வது தெரிய வந்தது.
இது குறித்து குடியாத்தம் காவல் நிலையத்தில் ராஜசேகர் சிசிடிவி காட்சிகளுடன் புகார் அளித்தார். இதன் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சில நாட்களாக குடியாத்தம் சுற்றுவட்டார பகுதிகளில் இருசக்கர வாகனம் திருடு போவது தொடர் கதையாக இருப்பதாக கூறப்படுகிறது. இதனை தடுக்க காவல் துறையினர் உரிய நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.