தடம்புரண்ட ஆவடி மின்சார ரயில் மீட்புப் பணிகள் - கழுகுப் பார்வை காட்சியில்! - தடம்புரண்ட ஆவடி மின்சார ரயில் மீட்புப் பணிகள்
Published : Oct 24, 2023, 6:21 PM IST
சென்னை:சென்னைபுறநகர்ப் பகுதியான ஆவடியில் காலை ரயில் விபத்து ஏற்பட்டு நான்கு பெட்டிகள் தடம்புரண்டன. இந்த நிலையில், விபத்துக்குள்ளான பகுதியில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது. இதில், சுமார் 300க்கும் மேற்பட்ட ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். சுமார் 8 மணி நேரத்திற்கும் மேலாகச் சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், விபத்துக்குள்ளான பகுதிகள் பிரத்தியேக கழுகு பார்வை காட்சிகள் வெளியாகியுள்ளது.
சென்னை ஆவடி ரயில் நிலையம் அருகே சென்று கொண்டிருந்த மின்சார ரயில் இன்று (அக்.24) அதிகாலை 5.40 மணியளவில் தடம்புரண்டு விபத்துகளானது. இதனால், ரயிலில் பயணித்தவர்கள் யாருக்கும் எவ்விதமான பாதிப்புகளும் ஏற்படவில்லை எனக் கூறப்படுகிறது. இருப்பினும், ஒருவருக்குப் படுகாயம் ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆவடி ரயில் நிலையத்திலிருந்து சென்னை கடற்கரை நோக்கிச் செல்வதற்காக 3வது நடைமேடைக்கு வந்த இந்த மின்சார ரயிலின் நான்கு பெட்டிகள் தடம்புரண்டன.
இதனைத்தொடர்ந்து, ரயில் பெட்டிகளை அகற்றும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இதனிடையே, இவ்விபத்துக்கான காரணம் ரயில் ஓட்டுநரின் கவனக்குறைவா? அல்லது சிக்னல் ஏதேனும் மாறியதா? என்பன உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் ரயில்வே போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
தீவிரமாக மீட்புப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ரயில்வே ஊழியர் ஒருவர் மீது அப்பகுதியிலிருந்த மின்சார கம்பம் சரிந்து விழுந்த சம்பவத்தில், ரயில்வே ஊழியர் சதிஷுக்கு தலையில் காயம் ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்குத் தலையில் மூன்று தையல்கள் போடப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.