எண்ணூரில் மழை நீரில் கலந்த ரசாயன கழிவு நீர்! - ரசாயன கழிவு நீர்
Published : Dec 8, 2023, 11:58 AM IST
திருவள்ளூர்:எண்ணூர் அருகே தேங்கியுள்ள மழைநீரில் ரசாயன கழிவு நீர் கலந்துள்ளதால், அப்பகுதி மக்கள் கடும் அவதிக்குள்ளாயுள்ளனர். இதனால், நீர் தேங்கியுள்ள பகுதிகளில் படகின் மூலமாக சென்று, அங்குள்ளவர்களை விஜய் மக்கள் இயக்கத்தினர் மீட்டு வருகின்றனர்.
மிக்ஜாம் புயல் காரணமாக பெய்த கனமழையால், சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சாலைகளிலும், குடியிருப்புகளிலும் வெள்ள நீர் சூழ்ந்தது. மழை குறைந்த காரணத்தினால், பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணி கடந்த 3 நாட்களாக நடைபெற்ற நிலையில், இன்றும் மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட எண்ணூர் பகுதிக்கு அருகில் இருக்கும் தொழிற்சாலையில் இருந்து இரசாயன கழிவுகள் வெளியேறி, அப்பகுதியில் தேங்கியுள்ள மழைநீரில் கலந்துள்ளது. மழை நீருடன் ரசாயண கழிவு நீர் கலந்துள்ளது அப்பகுதி மக்களிடையே மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், அப்பகுதியில் உள்ள கர்ப்பிணி ஒருவர் அங்கிருந்து வெளியே வர வழியில்லாத சூழ்நிலையில், விஜய் மக்கள் இயக்கத்திடம் உதவி கேட்டுள்ளார். இதனால் அப்பகுதிக்குச் சென்ற எண்ணூர் பகுதி விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள், ரசாயன நீரில் இறங்கி, படகின் மூலமாக வீட்டை விட்டு வெளியேற முடியாமல் தவித்த கர்ப்பிணி மற்றும் வயதான பாட்டி ஒருவரையும் பாதுகாப்பான முறையில் காப்பாற்றி, பத்திரமாக கொண்டு சேர்த்துள்ளனர்.