திருக்கார்த்திகை தீபத் திருவிழாவில் குதிரை வாகனத்தில் எழுந்தருளிய சந்திரசேகரர் சாமி! பக்தர்கள் சாமி தரிசனம்! - திருவண்ணாமலையில் எட்டாம் நாள் திருவிழா
Published : Nov 24, 2023, 4:06 PM IST
திருவண்ணாமலை:அண்ணாமலையார் கோயில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா மகா ரத தேரோட்ட விழா வெகு விமரிசையாக நிறைவு பெற்றது. இந்நிலையில், மகா ரதத்திற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் முருகர் மற்றும் சந்திரசேகரர் குதிரை வாகனத்தில் எழுந்தருளி நான்கு மாட வீதியில் இன்று (நவ 24) உலா வந்தனர்.
பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும், நினைத்தாலே முக்தி அளிக்கும் திருத்தலமாகவும் விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலின் திருக்கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 17ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது.
திருக்கார்த்திகை தீபத்திருவிழாவில் எட்டாம் நாளான இன்று (நவ. 24) அதிகாலையில் கோயில் நடை திறக்கப்பட்டு அண்ணாமலையார் மற்றும் உண்ணாமுலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. இதனை தொடர்ந்து திருக்கல்யாண மண்டபத்தில் விநாயகர் மற்றும் சந்திரசேகரருக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு 16 கால் மண்டபத்தில் முருகர் மற்றும் சந்திரசேகர் குதிரை வாகனத்தில் எழுந்தருளினர்.
இதனைத் தொடர்ந்து முருகர் மற்றும் சந்திரசேகரர், விநாயகர் நான்கு மாட வீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். முன்னதாக ஏழாம் திருவிழாவான நேற்று (நவ. 23) பஞ்ச மூர்த்திகளின் மகா ரத தேரோட்டம் நடைபெற்றது. பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் தேரோட்டம் முடிந்ததைத் தொடர்ந்து மகா ரதத்திற்கு சந்திரசேகரர் நன்றி தெரிவிக்கும் நிகழ்வு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.