ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு ஸ்ரீபெரும்புதூர் பெருமாள் கோயிலில் சாமி தரிசனம்! - ஸ்ரீபெரும்புதூர் ஆதிகேசவ பெருமாள் கோயில்
Published : Dec 13, 2023, 7:32 AM IST
சென்னை: ஸ்ரீபெரும்புதூரில் உள்ள பெருமாள் கோயிலில் ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சரும், தெலுங்கு தேசிய கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார். முன்னதாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர் ராவை நேரில் சந்தித்து நலம் விசாரித்த அவர், ஹைதராபாத் பேகம்பட் விமான நிலையத்தில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை வந்தடைந்தார்.
அதனை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ராமானுஜர் கோயிலுக்கு புறப்பட்டுச் சென்ற சந்திரபாபு நாயுடு, ஸ்ரீபெரும்புதூர் ஆதி கேசவப் பெருமாள் கோயிலில் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார். பின்னர் அங்கிருந்து காரில் புறப்பட்டுச் சென்ற அவர், சென்னையில் உள்ள இல்லத்தில் தங்கிவிட்டு, நேற்றிரவு மீண்டும் தனி விமானம் மூலம் சென்னையில் இருந்து, விஜயவாடா புறப்பட்டுச் சென்றார்.
இந்நிலையில், ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சர் சென்னை வருவதை அறிந்த தெலுங்கு தேசம் கட்சியின் ஏராளமான ஆதரவாளர்கள், சென்னை விமான நிலையம் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் கோயில் அருகில் ஒன்று கூடி, மலர்கள் தூவி வரவேற்றனர். மேலும், சந்திரபாபு நாயுடு வருகையை முன்னிட்டு சென்னை விமான நிலையம் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் பகுதிகளில் காவல் துறையினர் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.