Chamoli accident: கங்கை திட்ட பணியில் டிரான்ஸ்பார்மர் வெடித்து 16 பேர் பலி - வீடியோ வெளியீடு!
டேராடூன் : உத்தரகாண்ட் மாநிலம் சமோலியில் நமாமி கங்கை திட்டத்தில் டிரான்ஸ்பார்மர் வெடித்து 16 பேர் உயிரிழந்த சம்பவத்தின் பதைபதைக்க வைக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன.
உத்தரகாண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் உள்ள அலக்நந்தா ஆற்றங்கரையில் நமாமி கங்கை திட்டத்திற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. நேற்று (ஜூலை. 19) திட்டப் பணிகளின் போது, காலை 11.35 மணி அளவில் மின் டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றியது. அருகில் இருந்த பாலத்தில் மின்கசிவு ஏற்பட்ட கோர விபத்தில் அந்த பகுதியில் பணியாற்றிக் கொண்டு இருந்த 16 பேர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தனர்.
மேலும் விபத்தில் படுகாயம் அடைந்த 11 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்தில் காவல் உதவி ஆய்வாளர், இரண்டு காவலர்கள் உள்பட 16 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு நிவாரணம் அறிவித்த உத்தரகாண்ட் மாநில முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி, ஆட்சியர் தலைமையிலான குழு அமைத்து விபத்துக்கான காரணத்தை அறிய விசாரணை நடத்துமாறு உத்தரவிட்டார்.