மாஞ்சோலையில் சூறாவளியுடன் கூடிய மழை; முறிந்து விழுந்த செல்போன் டவர்; தொலைத் தொடர்பின்றி மக்கள் அவதி! - மாஞ்சோலையில் சூறாவளியால் முறிந்த டவர்
திருநெல்வேலி:அம்பாசமுத்திரம் மேற்குத்தொடர்ச்சி மலையில் மாஞ்சோலை, நாலுமுக்கு, ஊத்து உள்ளிட்ட தேயிலைத் தோட்டங்கள் உள்ளன. இங்கு 800க்கும் மேற்பட்ட தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் குடும்பமாக இருந்து வேலை செய்து வருகின்றனர். மேலும் இங்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்து செல்கின்றனர்.
இந்த நிலையில் மாஞ்சோலை தேயிலைத் தோட்டப் பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. மேலும் அவ்வப்போது சூறாவளி காற்றும் வீசுகிறது. இதனால் மாஞ்சோலை ஊத்து தேயிலைத் தோட்டப் பகுதியில் இருந்த செல்போன் கோபுரம் (பி.எஸ்.என்.எல்) முறிந்து, அங்குள்ள ஒரு கட்டடத்தின் மீது விழுந்தது. இதனால் சேதமடைந்து அப்பகுதியில் தொலைத் தொடர்பும் துண்டிக்கப்பட்டது.
இந்த விபத்தால் அங்குள்ள பள்ளி மாணவ, மாணவிகள் பெரியவர்கள் என அனைவரையும் தொடர்பு கொள்ள முடியாத சூழ்நிலை நிலவி வருகிறது. எனவே, உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இதேபோல் இரு தினங்களுக்கு முன், அங்கு சாலையின் குறுக்கே ராட்சத மரமும் முறிந்து விழுந்த நிலையில் அதை அங்குள்ள தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களே அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர்செய்துள்ள சம்பவம் குறிப்பிடத்தக்கது.