செல்போன் பேசியபடி பைக் ஓட்டிய நபரால் நிகழ்ந்த கோர விபத்து.. பதைபதைக்க வைக்கும் வீடியோ! - குமாரபாளையம் சர்விஸ் சாலையில் விபத்து
Published : Sep 4, 2023, 5:38 PM IST
நாமக்கல்:திருச்செங்கோடு பகுதியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் மற்றும் அவரது தாயார் பாலாமணி ஆகியோர் நேற்று இருசக்கர வாகனத்தில், தேசிய நெடுஞ்சாலையின் இடது புறமாக உள்ள சர்விஸ் சாலையில் குமாரபாளையம் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.
அப்போது எதிர்புறமாக குமாரபாளையம் நாராயண நகர் பகுதியை சேர்ந்த கோபால் என்பவர், இரு சக்கர வாகனத்தில் செல்போனில் பேசியபடியே சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது எதிரே வந்த பாலகிருஷ்ணன் மற்றும் அவரது தாயார் வந்த இருசக்கர வாகனத்தின் மீது நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
இதில், செல்போன் பேசிக்கொண்டு இருசக்கர வாகனத்தில் வந்த போபால், எதிர் திசையில் வந்த பாலகிருஷ்ணன் மற்றும் அவரது தாயார் பாலாமணி ஆகியோர் பலத்த காயமடைந்தனர். இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் படுகாயமடைந்த மூவரையும் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில் படுகாயம் அடைந்த கோபால் தனியார் மருத்துவமனையிலும், பாலகிருஷ்ணன் மற்றும் அவரது தாயார் பாலாமணி உயிருக்கு ஆபத்தான நிலையில் ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் குறித்து குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், தற்போது இந்த விபத்து குறித்த சிசிடிவி காட்சி சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.