கலெக்டர் ஆபீசில் கட்டிப்புரண்டு சண்டை - நிலத்தகராறால் விபரீதம் - cctv visual of fight due to land dispute
Published : Oct 24, 2023, 6:09 PM IST
தேனி:தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே உள்ள பேக்கரியில் நிலப் பிரச்சனை தொடர்பாக ஒருவரை ஒருவர் கண்மூடித்தனமாக தாக்கிக் கொள்ளும் சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேனி அருகே உள்ள கருவேல்நாயக்கன்பட்டியை சேர்ந்தவர் முத்தையா. இவரது அண்ணன் மகன் தங்கபாண்டி. இருவருக்கும் இடையே நிலம் தொடர்பாக நீண்ட நாட்களாக பிரச்சினை இருந்து வந்துள்ளது.
இந்நிலையில் முத்தையா தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே உள்ள பேக்கரியில் பொருட்கள் வாங்க வந்திருந்த போது அவ்வழியாக வந்த தங்கப்பாண்டி, முத்தையாவை பார்த்து அவரிடம் சென்று நில பிரச்சனை தொடர்பாக பேசியுள்ளார்.
அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில் கைகலப்பாக மாறி ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்ளும் நிலை ஏற்பட்டது. இதில் தங்கப்பாண்டி, தனது சித்தப்பா முத்தையாவை அங்கிருந்த இருசக்கர வாகனத்தின் மீது தள்ளிவிட்டு கண்மூடித்தனமாக தாக்கும் சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பின்னர் அருகில் இருந்தவர்கள் இருவரையும் சமாதானம் செய்துள்ளனர். பின்னர் இருதரப்பினரும் ஒருவர் மீது ஒருவர் மாறி மாறி தேனி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்நிலையில் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரேயே நடந்த இந்த சம்பவம் அப்பகுதியில் சிறிது பரபரப்பை ஏற்படுத்தியது.