காரில் வந்து செயின் பறிப்பு முயற்சி! பதைபதைக்கும் சிசிடிவி காட்சி! - chain snatching in covai
கோவை: பீளமேடு, ஹட்கோ காலனி பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார். இவரது மனைவி கவுசல்யா (வயது 38). இவர் தனது கணவருடன் நாள்தோறும் காலை நேரத்தில் அந்த பகுதியில் நடைப் பயிற்சி மேற்கொள்வது வழக்கம். இந்த நிலையில் பணி காரணமாக ராஜ்குமார் காலை நடைபயிற்சிக்கு வராததால் கவுசல்யா மட்டும் தனியாக நடைபயிற்சி மேற்கொண்டு உள்ளார். அப்போது அவர் ஜி.வி. ரெசிடென்சியில் உள்ள பேக்கரி அருகே நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது, அவரை பின்தொடர்ந்து வெள்ளை நிற காரில் வந்த மர்ம நபர்களில் ஒருவர் காரின் முன் பக்க ஜன்னலை திறந்து, அதன் வழியாக கையை வெளியே நீட்டி தனியாக நடந்து சென்று கொண்டிருந்த கவுசல்யா கழுத்தில் இருந்த நகையை பறிக்க முயன்றார். கண் இமைக்கும் நேரத்தில் நடைபெற்ற இந்த சம்பவத்தினால் கவுசல்யா அதிர்ச்சி அடைந்த போதிலும், தனது இரு கைகளாலும் நகையை இறுக்க பற்றிக் கொண்டு உள்ளார். மேலும் அவர் ’திருடன் திருடன்’ என்று கூச்சலிட்டு உள்ளார்.
எனினும் மர்ம நபர்கள் நகையை பறிக்க முயன்ற போது கவுசல்யா நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதனை அடுத்து காரில் வந்த மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர். இந்த சம்பவத்தினால் அதிர்ச்சி அடைந்த கவுசல்யா இந்த சம்பவம் குறித்து சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்ட போது சிசிடிவி கேமரா இருப்பது கண்டறியப்பட்டது.
மேலும் சிசிடிவி காட்சியில் பதிவான காரின் நம்பரை வைத்து அந்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். இதனிடைய நகை பறிப்பு சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.