பர்னிச்சர் கடையில் டிவி வாங்குவது போல் நடித்து திருட்டு - சிசிடிவி காட்சி மூலம் போலீஸ் விசாரணை! - tv theft issue in dindigul
திண்டுக்கல்: நத்தம் அருகே குட்டுப்பட்டியைச் சேர்ந்தவர் ராஜன் (35). இவர் நத்தம் - அசோக்நகர் பகுதியில் பர்னிச்சர் கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு இன்று (ஜூலை 7) மதியம் 40 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் வந்துள்ளார். பொருட்களை வாங்குவது போல், ஊழியர்களிடம் புதிய டிவி-களின் விலையை விசாரித்துள்ளார்.
மேலும் பல்வேறு மாடல்கள் குறித்து அவர் கேட்டதனால், கடைக்காரர் குடோனில் உள்ள டிவி-களை பார்க்குமாறு அழைத்துச் சென்றுள்ளார். இந்நிலையில் திடீரென குடோனில் இருந்து கடைக்கு வந்த நபர் கடையின் முன்னால் இருந்த 20 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள புதிய எல்.இ.டி. டிவியை திருடிக்கொண்டுச் சென்றுள்ளார்.
இந்தக் காட்சிகள் பர்னிச்சர் கடையில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது. உடனடியாக கடை உரிமையாளர் நத்தம் காவல் துறையினரிடம் இது குறித்து புகார் கொடுத்துள்ளார். புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்திற்குச் சென்ற காவல் துறையினர், விசாரணை நடத்தினர்.
முதற்கட்டமாக அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது அந்த நபர் கடையில் இருந்து டிவியை திருடிச்செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தன. சிசிடிவி பதிவுகளை கைப்பற்றிய நத்தம் காவல் துறையினர் டிவியை திருடிச் சென்ற நபரை தீவிரமாக தேடி வருகின்றனர்.