செருப்பு கடையில் தீ விபத்து.. மர்ம நபர் தீ வைத்ததாக பரவும் சிசிடிவி காட்சிகள்..! - முகமது ஆமீன்
திருப்பத்தூர்நகர் பகுதியைச் சேர்ந்த முகமது அனிப் மகன் முகமது ஆமீன் (37). இவர் திருப்பத்தூர் பெரியகுளம் பகுதியில் ஓராண்டு காலமாக செருப்பு கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் அமீன் வழக்கம் போல் இரவு 10 மணியளவில் தனது செருப்பு கடையை மூடிவிட்டு சென்றுள்ளார்.
அதன் பின் அமீன் மூடிவிட்டு சென்ற கடையில் திடீரென தீ பற்றி எரிந்தது. கடையில் இருந்த 10 லட்ச ரூபாய் மதிப்புள்ள காலணிகள் எரிந்து நாசமானதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதைத் தொடர்ந்து, அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த போது அமீன் கடை மூடப்பட்டதை அறிந்த மர்ம நபர் ஒருவர், செருப்பு கடையை திறந்து தீயை வைத்துவிட்டு திரும்பவும் கடையை மூடிவிட்டு அங்கிருந்து செல்வது போல் பதிவாகி இருந்தது.
தற்போது இந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இந்த சிசிடிவி காட்சிகளை வைத்து திருப்பத்தூர் நகர போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அதன் முதற்கட்ட விசாரணையில், சிசிடிவி காட்சிகளில் பதிவாகி இருக்கும் அந்த மர்ம நபர், கடையில் வேலை செய்யும் அப்பாஸ் என கடையின் உரிமையாளர் முகமது அமீன் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து போலீசார், எதற்கு தான் வேலை செய்யும் செருப்பு கடையிலேயே தீ வைக்க வேண்டும், இந்த சம்பவத்தின் பின்னனியில் இருக்கும் மர்மம் என்னவாக இருக்கும் என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.