தேனி: வீட்டு வாசலில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த காரை கடித்துக் குதறிய தெரு நாய்கள்! - மருத்துவரின் காரை தாக்கிய நாய்கள்
Published : Nov 29, 2023, 7:12 PM IST
தேனி: தேனி புதிய பேருந்து நிலையம் அருகே கே.ஆர்.ஆர்.நகரை சேர்ந்தவர் ராஜேஷ் கண்ணன். இவர் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இதய பிரிவு மருத்துவராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு பணி முடிந்து வீடு திரும்பிய அவர் தனது வீட்டு வாசலின் முன்பு தனது காரை நிறுத்தி வைத்துள்ளார். பின்னர் காலை வந்து பார்த்த போது தனது காரின் முன்பக்கம் பலமாக சேதமடைந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.
இதனால் சந்தேகமடைந்த அவர் தனது வீட்டில் பொறுத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை பார்த்தபோது உண்மை தெரியவந்தது. அப்பகுதியில் இருந்த சுமார் ஐந்து இருக்கும் மேற்பட்ட தெரு நாய்கள் காரை வெறி பிடித்தது போல் கடித்து குதறிய காட்சி அதில் பதிவாகி இருந்தது.
காரின் முன்பக்க பம்பர்களை கடித்துக் குதறிய நாய்கள் காரின் மேல் ஏறி நின்று சேதப்படுத்தி பின் அருகில் இருந்த வீடுகளுக்கு சென்றுள்ளது. காரை ஷோரூமிற்கு எடுத்துச் சென்று பார்த்த போது சுமார் 50 ஆயிரம் ரூபாய் வரை செலவு ஏற்படுத்தி இருப்பதாக கூறியுள்ளனர்.
இந்நிலையில் நாய்களின் தொல்லை இப்பகுதியில் தொடர்ந்து இருந்து வருவதாகவும், இது குறித்து நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அவர் கூறினார்.
மேலும் நள்ளிரவு நேரத்தில் அப்பகுதியை கடந்து செல்லும் பொது மக்களுக்கு நாய்கள் பெரும் அச்சுறுத்தலாக இருப்பதாக அவர் தெரிவித்தார். காரின் நிலைமை பொதுமக்களுக்கு ஏற்பட்டால் என்ன ஆவது என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.