காரில் வந்து ஆடுகளை திருடி சென்ற மர்ம நபர்கள்: சிசிடிவி காட்சிகளால் பரபரப்பு - theft news
திருப்பத்தூர்: இரவு நேரத்தில் காரில் வந்து ஆடுகளை திருடிச் சென்றவர்களின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாட்றம்பள்ளி அடுத்த வெள்ளநாயக்கனேரி பகுதியை சேர்ந்தவர்கள் காந்தி (50) மற்றும் பாரி (38). இவர்கள் இருவரும் தங்களின் வீட்டின் அருகே தனித்தனியாக 10 க்கும் மேற்பட்ட வெள்ளாடுகளை வளர்த்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்று காலை ஆடுகள் கட்டப்பட்டிருந்த இடத்திற்கு வந்த பாரி இரண்டு ஆடுகள் காணமல் போனதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். பின்னர் காந்தியின் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமிராவை ஆய்வு செய்த போது காரில் வந்த மர்ம நபர்கள் சிலர் கட்டி வைக்கப்பட்டிருந்த ஆட்டின் கயிறை அவிழ்த்து தங்களது காரில் கொண்டு சென்றுள்ளது தெரிய வந்துள்ளது.
இதனை தொடந்து பாரி இந்த சம்பவம் குறித்து திம்மாம்பேட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்து உள்ளார். அதன் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், சிசிடிவி காட்சிகளை அடிப்படையாக கொண்டு ஆடுகளை காரில் திருடி சென்ற மர்மநபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.