வத்தலகுண்டில் பட்டாக்கத்தியுடன் திருட முயற்சி.. வைரலாகும் சிசிடிவி காட்சி! - batlagundu robbers
Published : Oct 20, 2023, 12:34 PM IST
திண்டுக்கல்:வத்தலகுண்டு அருகே பச்சபட்டி சாலையில் உள்ள அப்துல் கலாம் நகரில் பட்டாக்கத்தியுடன் கொள்ளையர்கள் திருட முயற்சி செய்த சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு அருகே பச்சபட்டி சாலை, பட்டிவீரன்பட்டி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்டதாகும். இப்பகுதியில் கடந்த சில நாட்களாக சிறு சிறு திருட்டுகள் நடைபெற்று வருவதாகத் தெரிகிறது. இதனால் பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். மேலும், பட்டிவீரன்பட்டி காவல் நிலையத்தில் இது குறித்து மக்கள் புகார் செய்துள்ளனர்.
இந்நிலையில், நேற்று(அக்.19) அப்துல் கலாம் நகரில் மர்ம நபர்கள் இருவர், பட்டாக்கத்தி ஆயுதங்களுடன் இப்பகுதியில் உள்ள வீடுகளில் சுவர் ஏறி குதித்து திருடுவதற்கு முயற்சி செய்துள்ளனர். திருடர்கள் சுவர் ஏறி குதித்ததும், அப்பகுதியில் இருந்த காவல் நாய்கள் சத்தமிட்டதால், பொதுமக்கள் அச்சத்துடன் எழுந்து கூச்சலிட்டுள்ளனர். இதனால், திருடர்கள் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.
அப்துல் கலாம் நகரில் திருடர்கள் பட்டாகத்தியுடன் நுழைந்து திருடுவதற்கு முயற்சி செய்த காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது. எனவே, இந்த சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர். மேலும், நிலக்கோட்டை காவல்துறை துணை கண்காணிப்பாளர் முருகன் உத்தரவின்படி, திருநகர் அப்துல் கலாம் நகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ரோந்து பணிகளை தீவிர படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.