சாலையில் தன் மகனுடன் நடந்து சென்றவரை தாக்கிய பன்றிகள்: வைரல் வீடியோ! - காட்டுப் பன்றிகள் அட்டகாசம்
நீலகிரி: கூடலூர் நகரச் சாலைகள் குடியிருப்பு பகுதிகளில் சர்வ சாதாரணமாகக் காட்டுப் பன்றிகள் அவற்றின் குட்டிகளுடன் உலா வருகின்றன. இந்த நிலையில் செம்பாலாப் பகுதியில் 2 குட்டிகளுடன் வந்த பெரிய காட்டுப் பன்றிகள் சாலையைக் கடக்க நீண்ட நேரம் முயற்சி செய்தது.
சாலையில் தொடர்ந்து வாகனங்கள் சென்று கொண்டிருந்த காரணத்தால் காட்டுப் பன்றிகளால் சாலையைக் கடக்க முடியவில்லை. சிறிது நேரம் கழித்து சாலையைக் கடந்த காட்டுப் பன்றிகள் மீண்டும் வந்த வழியே ஓடி வந்தன. அப்போது சாலையோரம் தன் மகனை அழைத்து நடந்து சென்றவர் மீது காட்டுப் பன்றிகள் மோதியதில் அவர் நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார்.
அப்போது தனது தந்தை கீழே விழுந்ததைக் கண்டு அந்த சிறுவன் கதறி அழுத காட்சிகள் அங்குப் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. தற்போது அந்த பாசப் போராட்டக் காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.