குடிபோதையில் ரகளையில் ஈடுபட்ட 3 பெண்கள் மீது வழக்கு - ரகளையில் ஈடுபட்ட பெண்கள்
சென்னை: திருவல்லிக்கேணி வாலாஜா சாலையில் நேற்றிரவு 11 மணி அளவில் 3 பெண்கள் மது அருந்திவிட்டு அங்கு சாலையில் செல்பவர்களிடம் ரகளையில் ஈடுபடுவதாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் வந்தது. இந்த தகவலின் அடிப்படையில் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த பெண் ஆய்வாளர் தலைமையிலான காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ரகளையில் ஈடுபட்ட மூன்று பெண்களையும் சமாதானப்படுத்த முயற்சி செய்தனர்.
ஆனால், போதை தலைக்கேறிய நிலையில் 3 பெண்களும் ரகளையில் ஈடுபட்டு வந்தனர். இதனையடுத்து பெண் காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல் துறையினர், அந்த மூன்று பெண்களையும் பிடித்து மது போதைக்கான சோதனை மேற்கொள்ளப்பட்டு பின்பு விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த மூன்று பெண்களும் கண்ணகி நகர் பகுதியைச் சேர்ந்த பெண்கள் என்றும் மேலும் அவர்கள் திருவல்லிக்கேணி பகுதியில் நடைபெற்ற திருமண விழாவில் உணவு பரிமாறுவதற்காக வேலைக்கு வந்ததும் தெரியவந்தது.
அப்போது 6 பெண்கள் கும்பலாக வந்ததும் போதை தலைக்கேறி மாறி மாறி தாக்கி கொண்டதும் தெரியவந்துள்ளது. இதையடுத்து மூன்று பெண்களையும் கண்ணகி நகரில் உள்ள அவர்களது பெற்றோர்களிடம் பெண் காவல் ஆய்வாளர் தலைமையில் காவல் துறையினர் ஒப்படைத்தனர். இந்த நிலையில் சாலையில் மது அருந்தி ரகளையில் ஈடுபட்ட மூன்று பெண்கள் மீதும் திருவல்லிக்கேணி காவல் மாவட்ட காவல் துறையினர் இரண்டு பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதையும் படிங்க:மனைவி, மாமியாரை கொலை செய்த இளைஞர்.. ஸ்மார்ட்போனால் பறிபோன உயிர்கள்.. சினிமாவை மிஞ்சும் கிரைம் ஸ்டோரி..