நடுரோட்டில் திடீரென பற்றி எரிந்த கார்.. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ஓட்டுநர்! - வேலூர் மாவட்ட செய்தி
Published : Oct 5, 2023, 1:56 PM IST
வேலூர்: சாலையில் ஓடிக் கொண்டிருந்த கார் திடீரென தீ பற்றி எறிந்த நிலையில், கார் ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரி ரங்காபுரம் பகுதியைச் சேர்ந்தவர், மாதய்யன். இவர் தன்னுடைய இண்டிகா காரில் வேலூர் செல்வதற்காக சென்னையிலிருந்து பெங்களூரு செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே உள்ள மேம்பாலத்தின் மீது சென்று கொண்டிருந்துள்ளார்.
அப்போது அவரது கார் திடீரென தீப்பிடித்து எரியத் தொடங்கியது. இதைக் கண்ட மாதய்யன் உடனடியாக காரை நிறுத்திவிட்டு இறங்கி ஓடியுள்ளார். இவ்வாறு கார் ஓட்டுநர் தக்க சமயத்தில் காரை விட்டு வெளியேறியதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி உள்ளார். இதனையடுத்து காரில் தீ முழுவதுமாக பரவி எரிய ஆரம்பித்துள்ளது. கார் தீப்பிடித்து எரிந்ததால் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பின்னர், தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத் துறையினர், காரில் பற்றி எரிந்த தீயை போராடி அணைத்தனர். இந்த சம்பவம் குறித்து சத்துவாச்சாரி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்