கொங்கர்பாளையத்தில் சிறுத்தையைப் பிடிக்க கூண்டோடு காத்திருந்த வனவர்கள்! - today news
ஈரோடு:கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொங்கர்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் நஞ்சப்பன். விவசாயியான இவர் வீட்டிற்கு அருகில் உள்ள தன் விவசாய நிலத்தில் கொட்டகை அமைத்து ஆடுகள் வளர்த்து வருகிறார். நஞ்சப்பன் வழக்கம்போல ஆடுகளை மேயச்சலுக்கு கொண்டு செல்வதற்காக கொட்டகைக்கு சென்று பார்த்த போது ஒரு ஆடு காணாமல் போனது தெரிய வந்தது.
அதைத் தொடர்ந்து நஞ்சப்பன் காணாமல் போன ஆட்டை முழுவதும் தேடி பார்த்து உள்ளார். அப்போது அருகில் இருந்த வனப்பகுதிக்குள் ஆட்டின் உடல் பாகங்கள் சிதறிக் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த நஞ்சப்பன் இது குறித்து டி.என் பாளையம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற டி.என் பாளையம் வனச்சரக வனவர்கள் பழனிச்சாமி, சிறுத்தை நடமாடிய பகுதியில் கால் தடங்களை வைத்து ஆட்டை கொன்ற விலங்கு சிறுத்தை என உறுதி செய்தனர்.
அதைத் தொடர்ந்து கொங்கர்பாளையம் பகுதியில் சிறுத்தையை கண்காணிப்பதற்காக மூன்று இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சிறுத்தை தாக்கி ஆடு உயிரிழந்த சம்பவம் காரணமாக அச்சம் அடைந்த விவசாயிகள், அதே பகுதியில் ஒரு ஆடு, இரண்டு முறை நாய்களையும், அதைத் தொடர்ந்து துறையம்பாளையம் பகுதியில் உள்ள ஆடுகளையும் கடந்த 4 மாதங்களில் அடுத்தடுத்து சிறுத்தை தாக்கி கொன்று உள்ளதால் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என வனவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இந்த நிலையில் வனத்துறையினர் பொருத்திய கேமராவில் சிறுத்தை நடமாட்டம் இருப்பது உறுதியானதைத் தொடர்ந்து சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறையினர் முடிவு செய்து தயார் நிலையில் கூண்டை வைத்து உள்ளனர். மேலும், சிறுத்தை அடிக்கடி நடமாடிய இடத்தில் நாளை கூண்டு வைக்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்து உள்ளனர்.