Video: முதல்வர் கான்வாய் செல்லும் வழியில் பேருந்து விபத்து; கான்வாய்க்காக பாலத்தை உடைத்த அதிகாரிகள்! - anna flyover accident
சென்னை:அண்ணா சதுக்கம் முதல் பூந்தமல்லி நோக்கி செல்லும் 25ஜி தடம் எண் கொண்ட சென்னை மாநகர பேருந்து இன்று காலை 11.40 மணி அளவில் அண்ணா சதுக்கத்தில் இருந்து புறப்பட்டு சரியாக 12 மணி அளவில் அண்ணா மேம்பாலத்தில் இருந்து கீழே இறங்கும் போது பேருந்து பிரேக் கோளாறு காரணமாக அண்ணா மேம்பாலத்தில் இருபுற சுவர்களுக்கும் இடையில் சிக்கிக்கொண்டது.
இதனால் அண்ணா மேம்பாலம் மற்றும் அண்ணா சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சரியாக 12.10 மணி அளவில் முதல்வர் கான்வாய் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனால் மிரண்டு போன அதிகாரிகள் உடனடியாக பேருந்தை அப்புறப்படுத்தும் பணியில் இறங்கினர். ஆனால் பேருந்து இரு பக்கவாட்டு சுவர்களில் மோதி நின்றதால் பேருந்தை மீட்பதில் சிரமம் ஏற்பட்டது.
இதற்கிடையே முதல்வர் வாகனம் வருகிறது என்ற அறிவிப்பு வாக்கி டாக்கியில் அலறியபடியே இருக்க வேறு வழி இல்லாமல் அண்ணா மேம்பாலத்தின் பக்கவாட்டு சுவர்களை போலீசார் இடிக்க முடிவு செய்தனர். இதன் படி அண்ணா மேம்பாலத்தின் சுவர்களை இடித்து பேருந்தை பத்திரமாக மீட்டனர். பேருந்தை மீட்ட சில நிமிடங்களில் முதல்வர் கான்வாய் அந்த வழியை கடந்து சென்றது.
இந்த விபத்தில் யாருக்கும் எத்தகைய காயமும், உயிர் இழப்பும் ஏற்படவில்லை. பேருந்து நடத்துனர் மற்றும் ஓட்டுநர் ஆகியோர் அதிர்ச்சியில் இருந்ததால் அவர்களை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக போக்குவரத்து காவலர்கள் அனுப்பி வைத்தனர். கடந்த ஜூலை 1ஆம் தேதி அண்ணா மேம்பாலம் கட்டப்பட்ட 50ஆம் ஆண்டு விழா கொண்டாடப்பட்ட நிலையில் இன்று அண்ணா மேம்பாலத்தில் பேருந்து மோதி விபத்து ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: சிவாஜி கணேசனின் 22வது நினைவு தினம்.. அமேசானில் தொடர்ந்து முதலிடம் வகிக்கும் 'தண்டட்டி' வரை சினிமா சிதறல்கள்!