Happy Holi: ஜம்மு-காஷ்மீர் எல்லையில் ஹோலி கொண்டாடிய BSF வீரர்கள்! - Jammu News in tamil
ஜம்மு-காஷ்மீர்: இந்திய எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் நேற்று (மார்ச்.7) உற்சாகமாக 'ஹோலி பண்டிகை'யை வண்ண வண்ண சாயப் பொடிகளை ஒருவருக்கொருவர் பூசிக் கொண்டாடினர். இந்த கொண்டாட்டத்தில் அப்பகுதியை சேர்ந்த உள்ளூர் வாசிகளும் கலந்து கொண்டு எல்லை பாதுகாப்பு படை வீரர்களுக்கு தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
இந்தியா பாகிஸ்தான் எல்லையில் உள்ள காஷ்மீரின் சம்பா பகுதியில் கடந்த மார்ச் 6 ஆம் தேதி முதலே ஹோலி பண்டிகையை அங்குள்ள உள்ளூர் பகுதி மக்களுடன் இணைந்து கொண்டாட ஆரம்பித்தனர். அப்போது செய்தியாளர்களிடையே பேசிய பெண் ராணுவ வீரர் ஒருவர் கூறுகையில், 'இப்பகுதியில் உள்ள பொதுமக்கள் தங்களுடன் இணைந்து ஹோலி பண்டிகையை ஆடலும் பாடலுமாக கொண்டாடினோம்.
நாங்கள் என்னதான் எங்களது வீட்டைத் தாண்டி பல மையில்களுக்கு அப்பால் எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டாலும் எங்களுக்கு எங்களினுடைய வீட்டில் இருக்கின்ற ஒரு உணர்வை இத்தகைய கொண்டாட்டங்களின் மூலம் இந்த மக்கள் எங்களுக்கு உணர்த்துகின்றனர். இதேபோல அனைவரும் பண்டிகைகளைக் கொண்டாட வேண்டும்' என்று மகிழ்ச்சியுடன் அவர் கூறினார்.
பொதுவாக, இந்த ஹோலி பண்டிகை என்பது வட இந்தியா முழுவதும் மிகவும் பிரசித்தி பெற்ற ஒரு பண்டிகையாகும். இந்த பண்டிகை நாளுக்கு முதல் நாளிலிருந்தே சோட்டி ஹோலி மற்றும் ஹோலி தஹன் என்ற பெயரில் கொண்டாடங்கள் ஆரம்பம் ஆகின்றன.
இந்துக்களின் நம்பிக்கையின் படி, பூர்ணிமா திதியில் வரும் பிரதோஷ காலத்தில் சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு இந்த பண்டிகை வரும். இந்த ஹோலி பண்டிகையானது, வசந்த காலத்தை வரவேற்கும் விதமாகவும், தீமைக்கு எதிராக நன்மையின் வெற்றியை குறிப்பதாகவும் இவ்வாறு இரண்டு நாட்களுக்கு மிகவும் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.