British Minister visit: பிச்சாவரம் சுற்றுலா மையத்தை பார்வையிட்ட பிரிட்டிஷ் சுற்றுச்சூழல் அமைச்சர்!
கடலூர்:சிதம்பரம் அருகே உள்ள பிச்சாவரம் சுற்றுலா மையத்தில் சுரபுன்னை (அலையாத்தி காடுகள்) காடுகள் அதிகளவு உள்ளது. இப்பகுதி வனத்துறையினரால் பராமரிக்கப்பட்டு வருகிறது. காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் பாதிப்பு குறித்து பார்வையிட இன்று ( ஜூலை 29) பிரிட்டிஷ் அரசின் சுற்றுச்சூழல் அமைச்சர் தெரசா அன்னே கபே பிச்சாவரம் வந்தார். பிச்சாவரம் சுற்றுலா மையத்திற்கு வருகை புரிந்து, சுற்றுலா மையத்தை பார்வையிட்டார்.
அப்பகுதியில் உள்ள பழங்குடியினர் மக்களிடம் சுரபுன்னை காடுகள் எப்படி பராமரிக்கப்பட்டு வருகிறது எனவும் அதனால் தங்கள் வாழ்வாதாரம் எப்படி உள்ளது என பழங்குடியின மக்களிடம் கலந்துரையாடல் செய்தார். பின்னர் படகில் சென்று சுரபுன்னை காடுகள் நடுவே காலநிலை மாற்றம் குறித்து பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டார்.
பிச்சாவரம் சுற்றுலா மையத்திற்கு வருகை புரிந்த பிரிட்டிஷ் சுற்றுச்சூழல் அமைச்சருக்கு மேளதாளங்கள் முழங்க கோலாட்டம் ஆடி, மாலை அணிவித்து கிரீடம் சூடி உற்சாக வரவேற்பை கிள்ளை பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பில் செய்யப்பட்டது. இச்சந்திப்பில் அரசு கூடுதல் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை தலைமைச் செயலாளர் சுப்ரியா சாகு, மாவட்ட ஆட்சியர் அ.அருண் தம்புராஜ் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.