தமிழ்நாட்டில் களைகட்டும் புத்தகத்திருவிழா..விழுப்புரத்தில் அமைச்சர் பொன்முடி தொடங்கிவைப்பு!
விழுப்புரம்:புத்தக வாசிப்பை ஒரு மக்கள் இயக்கமாக எடுத்துச்செல்ல, சென்னை புத்தகக் கண்காட்சி போன்று தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் புத்தகக் காட்சிகள் நடத்தப்படும் என முதலமைச்சர் அறிவித்திருந்தார். அதன்படி தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் முதல்முறையாக புத்தகத் திருவிழா நடைபெற்று வருகிறது.
அந்தவகையில் விழுப்புரம் மாவட்டத்தில், முதல்முறையாக, நேற்று புத்தகத் திருவிழாவினை உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் மஸ்தான் இருவரும் தொடங்கி வைத்தனர். மேலும், விழுப்புரம் புதிய பேருந்துநிலையம் அருகிலுள்ள, நகராட்சித் திடலில் நடைபெறும் இந்த புத்தகத்திருவிழா 12 நாட்கள் நடைபெறவுள்ளது.
இந்த புத்தகத்திருவிழாவில் கலை, இலக்கியம், வரலாறு, கதை, கவிதைகள் என ஆயிரக்கணக்கான தலைப்புகளில் புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. மேலும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்குத் தேவையான புத்தகங்களும் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்த புத்தகத்திருவிழாவில் அனைத்து புத்தகங்களும் பத்து சதவீத தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
மேலும் தமிழக அரசின் பல்வேறு துறைகளின் சார்பிலும் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த புத்தகத் திருவிழாவின் அரங்குகளை உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் மஸ்தான் இருவரும் பார்வையிட்டனர். இந்த புத்தகத் திருவிழாவில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், ''அமெரிக்காவில் கருப்பர்கள் நிறத்தால் அடிமைப்படுத்தப்பட்டார்கள், இங்கு சாதிப் பெயரால் மக்கள் அடிமைப்படுத்தப்பட்டிருக்கிறோம். தாழ்த்தப்பட்டவர்கள் கோயிலுக்குச் செல்ல முடியாத நிலையை மாற்றி அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது,இது தான் திராவிட மாடல் ஆட்சி.
திராவிட மாடல் ஆட்சி என்பது யாரையும் புண்படுத்தும் நோக்கமல்ல, அனைவரையும் மனிதர்களாக நினைத்து மதிக்க வேண்டும். சாதி, மதம், மொழி, ஆண், பெண் வேறுபாடு இல்லாமல், அனைவரும் சமம் என நினைத்து வாழ்வதுதான் திராவிட மாடல்' என்றும் கூறினார்.
மேலும், சின்ன வயதில் இருந்தே மாணவர்கள் பொது அறிவு புத்தகங்களைப் படிக்க வேண்டும் என்றும்; ஆசிரியர்களுக்கு நூலகம் செல்லும் பழக்கம் இருந்தால் தான் மாணவர்கள் அதைப் பின்பற்றுவார்கள் என்றும் கூறினார். மேலும், தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் புதுமைப் பெண் திட்டத்தின் மூலமாக மாதம் ஆயிரம் கொடுத்து வருகிறார். இதனால் இந்த ஆண்டும் உயர் கல்வியில் சேரும் மாணவிகளின் எண்ணிக்கை 27 சதவீதம் உயர்ந்துள்ளது என்றும் தெரிவித்தார்.
மேலும், இந்தியாவிலேயே உயர் கல்வி பெறும் மாணவர்களின் எண்ணிக்கை 53 சதவீதமாக உள்ளது. இது சராசரியை விட அதிகம். இந்த எண்ணிக்கையை 75 சதவீதமாக உயர்த்த முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார் என்றும் கூறினார்.
இதைத்தொடர்ந்து, அமைச்சர் செஞ்சி மஸ்தான் கூறுகையில், கல்லூரிக்கு சென்று படிக்கின்ற வாய்ப்பு இல்லை என்றாலும், கல்லூரி நிகழ்வுகளில் கலந்து கொள்கிற வாய்ப்பினை பெற்றவனாக தான் உள்ளதாகவும், தமிழர்களின் கலாசாரம் பண்பாடு புத்தகத்தின் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது என்றும், முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் பெண்கள் கல்வி அறிவு பெற வேண்டும் என்பதால் புதுமைப்பெண் திட்டத்தினை துவங்கி ஆயிரம் ரூபாய் வழங்கி, இந்தியாவிற்கே எடுத்துக்காட்டாகத் திகழ்கிறார் என்றும் கூறினார்.