"தி எலிபன்ட் விஸ்பரர்ஸ்" பார்ட்-2 : பொம்மன் - பெள்ளியின் அரவணைப்பில் அடுத்த குட்டி! - Supriya Sahu IAS
தருமபுரி மாவட்டத்தில் யானை கூட்டத்தில் இருந்து பிரிந்த குட்டி யானை ஒன்று, 40 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்தது. இதனையடுத்து மேற்கொண்ட நீண்ட போராட்டத்துக்குப் பிறகு, வனத்துறையினர் அந்த குட்டி யானையை பாதுகாப்பாக மீட்டனர். பின்பு ஒரு வார காலமாக வனத்துறையினர் குட்டியை பாதுகாத்து வந்த நிலையில் தாய் யானையுடன் சேர்க்கும் முயற்சியிலும் ஈடுபட்டனர். ஆனால், இந்த முயற்சி பலன் அளிக்கவில்லை.
இந்த நிலையில் தாயைப் பிரிந்த குட்டி யானையை நீலகிரி மாவட்டம் முதுமலை யானைகள் முகாமிற்கு கொண்டு செல்ல வனத்துறை முடிவு செய்தது. இதன் அடிப்படையில் கடந்த மார்ச் 17ஆம் தேதி குட்டி யானையை முதுமலை யானைகள் முகாமிற்கு கொண்டு வந்தனர். மேலும் இந்த குட்டி யானையை ஆஸ்கர் விருது வென்ற ‘தி எலிபன்ட் விஸ்பரர்ஸ்’ என்ற ஆவண குறும்படத்தில் நடித்த பொம்மன், பெள்ளி ஆகிய இருவரும் பராமரிக்க அரசு உத்தரவிட்டது. இந்த நிலையில், அந்த குட்டி யானை பொம்மன், பெள்ளி ஆகிய இருவருடன் கொஞ்சி விளையாடும் வீடியோவை வனத்துறை செயலர் சுப்ரியா சாகு ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.