போடிநாயக்கனூர் கொட்டக்குடி ஆற்றில் வெள்ளப்பெருக்கு... அடித்து செல்லப்பட்ட தென்னை மரங்கள்!
Published : Dec 8, 2023, 6:09 PM IST
தேனி: தமிழ்நாட்டில் வடகிழக்கு தொடங்கி பல்வேறு இடங்களில் பருவமழை பெய்து வருகிறது. அந்த வகையில், போடிநாயக்கனூர் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளான கொட்டக்குடி, குரங்கணி, பிச்சாங்கரை உத்தம்பாறை பகுதிகளில் நேற்று (டிச.7) இரவு மழை பெய்தது. சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாகக் கனமழை பெய்தது. இதன் காரணமாகக் கொட்டக்குடி ஆற்றில் தீடிரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.
கனமழை காரணமாக, அணைப் பிள்ளையார் நீர்வீழ்ச்சியில், தடுப்பணைகளைத் தாண்டி வெள்ள நீரானது சீறிப் பாய்வதால், அணைப் பிள்ளையார் நீர்வீழ்ச்சி பகுதியிலும், கொட்டக்குடி ஆற்றுப் பாலப் பகுதியிலும் காவல்துறையினர் மற்றும் பொதுப்பணித் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.
ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாகப் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் ஆற்றைக் கடந்து செல்லவும், கால்நடைகளைக் குளிப்பாட்டுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. கொட்டக்குடி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக ஆற்றின் கரைகளைத் தாண்டி நீர் சென்றதால், கரை ஓரங்களில் மண் சரிவு ஏற்பட்டு சுமார் 10க்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் மற்றும் இலவ மரங்கள் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டன.