காவிரி நீர் விவகாரம் தொடர்பாக அண்ணாமலை அறிவித்த போராட்டம் ரத்து - கருப்பு முருகானந்தம் - karnataka
Published : Oct 15, 2023, 7:37 AM IST
தஞ்சாவூர்:காவிரி நீர் விவகாரம் தொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்திருந்த போராட்டம் தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக பாஜக மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம் அறிவித்துள்ளார். கும்பகோணத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் கூறியதாவது, “தமிழகத்திற்கு குறைந்த அளவிலான காவிரி நீரை கர்நாடக அரசு திறந்துள்ள நிலையில், நாளை (அக்-16) காவிரி நீர் பிரச்னையில் விவசாயிகளுக்கு துரோகம் இழைக்கும் திமுக தலைமையிலான தமிழக அரசை கண்டித்தும், தண்ணீர் விடாமல் வஞ்சிக்கும் கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் கட்சியைக் கண்டித்தும் கும்பகோணத்தில் நடத்த திட்டமிட்டிருந்த பாஜகவின் உண்ணாவிரத போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுகிறது” என தெரிவித்தார்.
மேலும், இதனை மாநிலத் தலைவர் அண்ணாமலையின் உத்தரவின்படி தெரிவிக்கிறேன் என்றும், கர்நாடகாவில் இருந்து நீர் திறந்து விடுவதில் மீண்டும் ஏதேனும் இடையூறு ஏற்பட்டால், திட்டமிட்டு இருந்ததை விட, பெரிய அளவிலான போராட்டத்தை பாஜக முன்னெடுக்க தயங்காது என்றும் கருப்பு முருகானந்தம் தெரிவித்துள்ளார்.