"தமிழக முதல்வருக்கு காதும் இல்லை, வாயும் இல்லை" - ஹெச்.ராஜா விமர்சனம்!
புதுக்கோட்டை மாவட்டத்தில் புதிதாகக் கட்டப்பட்ட பாஜக மாவட்ட அலுவலகம் நேற்று(மார்ச் 10) திறக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் ஹெச். ராஜா, உள்ளாட்சி பிரிவு மாநிலத் தலைவர் சோழன் பழனிசாமி, தேசிய பொதுக்குழு உறுப்பினர் புரட்சிகவிதாசன், மாவட்ட பொருளாளர் முருகானந்தம், மாவட்டச் செயலாளர் ஏவிசிசி. கணேசன் உள்ளிட்ட மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் கலந்துக்கொண்டனர். பாஜக மாவட்ட அலுவலகம் திறப்பு விழாவை முன்னிட்டு அப்பகுதியே பாஜக கொடி, பேனர்கள் என விழா கோலமாக காட்சியளித்தது.
நிகழ்ச்சிக்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய ஹெச். ராஜா, “ஆன்லைன் ரம்மி விவகாரத்தில், அவசரச் சட்ட காலத்தில், தமிழக அரசு இதுவரை ஒருவரை கூட கைது செய்யவில்லை. திமுகவின் நோக்கம் ஆன்லைன் ரம்மி அவசர சட்டம் பிரகடனப்படுத்துவது அல்ல. மாறாக ஆளுநர் மற்றும் மத்திய அரசை வம்புலிப்பதற்காகவே சட்டம் கொண்டுவரப்பட்டது. சைபர் கிரைம் குற்றத்திற்கு, அவசரச் சட்டம் கொண்டு வருவதற்கு மத்திய அரசுக்கு மட்டுமே உரிமை உள்ளது. மாநில அரசுக்கு அந்த அதிகாரம் இல்லை” எனத் தெரிவித்தார்.
தமிழக ஆளுநருக்கு வாய் மட்டும் தான் உள்ளது, காது இல்லை என முதலமைச்சர் ஸ்டாலின் கூறிய கருத்திற்கு, “தமிழக முதல்வருக்குக் காதுமில்லை, வாயும் இல்லை. ராணுவ வீரர் கொலை செய்யப்பட்டதற்கு இதுவரை எதுவும் முதல்வர் பேசவில்லை. ஸ்டாலின் மந்திரி சபையின் கூட்டம் பைத்தியக்காரர்களுடைய கூட்டம். அநாகரிகமாகக் கல் எடுத்து அடிப்பதும், தலையில் அடிப்பதும் போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்” என்றார்.