கள்ளச்சந்தையில் மதுபானம் விற்பதைக்கண்டித்து பாஜக கேக் வெட்டி நூதனப் போராட்டம்!
புதுக்கோட்டை: தமிழ்நாட்டில் அரசு மதுபானக் கடையான டாஸ்மாக் பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரை செயல்பட்டு வருகிறது. ஆனால், புதுக்கோட்டையில் மதுபானம் விற்பனை அரசின் குறித்த மணி நேரம் போக மற்ற நேரங்களில் கடை அருகே கள்ளச்சந்தையில் மதுபான விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் கள்ளச்சந்தையில் ஒரு மதுபான பாட்டிலுக்கு 100 முதல் 150 ரூபாய் வரை கூடுதலாக விற்பனையாகி வருகிறது. இந்த கூடுதல் விலையையும் பொருட்படுத்தாமல், மதுப் பிரியர்கள் மதுவை வாங்கி அருந்தி வருகின்றனர்.
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள், பல்வேறு அமைப்புகள் சார்பில் அரசிடம் புகார் அளித்தும், மாவட்ட நிர்வாகம் எந்தவித நடவடிக்கையும் எடுக்காத நிலையில், புதுக்கோட்டையில் பாஜக சார்பில் 24 மணி நேரம் தடையில்லாமல் மதுபானம் விற்கப்படுவதைக் கண்டித்து, அரசு தொடர்பு பிரிவு மாவட்டத் தலைவர் சீனிவாசன், முன்னாள் அலுவலக செயலாளர் சோபன்பாபு ஆகியோர் தலைமையில் புதிய பேருந்து நிலையத்தில் கேக் வெட்டி பொது மக்களுக்கு வழங்கப்பட்டது.
மது விலக்கு அமல்படுத்த வேண்டும், படிப்படியாக மதுக்கடைகளை மூட வேண்டும், சட்ட விரோத மது விற்பனையைத் தடுக்க வேண்டும், அதற்கு காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி பாஜகவினர் கோஷம் எழுப்பினர். பின்னர் கேக் வெட்டி, பொதுமக்கள் மற்றும் மதுப் பிரியர்களுக்கு கேக் மற்றும் லட்டு வழங்கி நூதன முறையில் போராட்டம் நடத்தினர்.