கொளுத்தும் வெயிலில் அமைச்சருக்காக 6 மணி நேரம் காத்திருந்த மக்கள்! - pudhukottai district news
புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு துறை சார்பில் 338 பயனாளிகளுக்கு ரூபாய் 25.67 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் நேற்று 25ஆம் தேதி ஏற்பாடுகள் செய்யப்பட்டது. அந்த நிகழ்வில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் ஆகியோர் கலந்து கொள்ள இருந்தனர்.
இதற்குப் புதுக்கோட்டை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து நலத்திட்ட உதவிகள் பெரும் பயனாளிகள் காலை 11 மணிக்கு வரவழைக்கப்பட்டு, அந்தந்த நலத்திட்டத்தின் படியும், மேடை முன்பும் அமர வைக்கப்பட்டன. மாலை 3 மணிக்கு நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்வு நடைபெறும் என கூறப்பட்ட நிலையில், மாலை 5 மணி வரை நிகழ்ச்சிக்கு அமைச்சர்கள் வராததால் பயனாளிகள் மிகுந்த இன்னலுக்கு ஆளாகினர்.
மேலும் ஆளே இல்லாத நிகழ்ச்சி மேடைக்கு நான்கு ஏர்கூலர் இயக்கப்பட்ட நிலையில், எதிரே அமர்ந்திருந்த பயனாளிகள் பகுதிக்கு ஒரு மின்விசிறி கூட வைக்கப்படவில்லை. பயனாளிகள் வெயிலின் வெக்கை தாங்க முடியாமல் கையில் வைத்திருந்த பேப்பர் மற்றும் கைக்குட்டையால் விசிறி பெரும் அவதிக்குள்ளாயினர்.
இவ்வளவு வேதனையில் பொதுமக்கள் 6 மணி நேரம் காத்திருந்த பிறகு ஆரம்பித்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வு அவசர அவசரமாக வெறும் பத்து நிமிடத்தில் நிறைவு பெற்றது. முன்னதாக தமிழ்த்தாய் வாழ்த்து கூட பாடாமல் இந்த அரசு நிகழ்ச்சி நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:வட போச்சே!.... 'வெட்டி பந்தா' பாஜக நிர்வாகியின் அலப்பறை! காமெடி ஸ்டோரியின் பின்னணி என்ன?