வீட்டின் பூட்டை உடைத்து அரிசி, கோதுமையை சாப்பிட்ட கரடி - அச்சத்தில் மக்கள்!
நீலகிரி மாவட்டம் குன்னூர், ஜெகதளா, கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கரடிகளின் நடமாட்ட எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக உணவு மற்றும் தண்ணீருக்காக குடியிருப்பு பகுதிகளில் உலா வருவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்னர்.
இந்த நிலையில் குன்னூர் வெலிங்டன் பகுதியில் குடியிருக்கும் அமரநாதன் என்பவர் வீட்டினை பூட்டி விட்டு கோவை மாவட்டம் சென்றுள்ளார். ஆள்நடமாட்டம் இல்லாத அப்பகுதியில், அமரநாதன் வசிக்கும் வீட்டின் கதவுகளை உடைத்து உள்ளே சென்ற கரடி அங்கிருந்த அரிசி, கோதுமை, சர்க்கரை உள்ளிட்டப் பொருட்களை உண்டுவிட்டு சென்றுள்ளது.
இதனையறிந்த அக்கம்பக்கத்தினர் சத்தமிடவே சிறிது நேரத்தில் அருகில் இருந்த சோலைப் பகுதிக்கு சென்றுள்ளது. இங்குள்ள நியாயவிலைக் கடை உள்ளிட்டப் பகுதிகளிலும், குடியிருப்புகளையும் உடைத்து சேதம் செய்யும் கரடியால் அசம்பாவிதங்கள் எதுவும் நடக்கும் முன், அட்டகாசம் செய்யும் கரடியை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: Video - பொள்ளாச்சியை அடுத்த சரளபதியை சூறையாடும் மக்னா யானை; விவசாயிகள் வேதனை!