வீட்டின் கதவை உடைத்து கரடி அட்டகாசம்.. கூண்டு வைத்து பிடிக்க பொதுமக்கள் கோரிக்கை ! - வனத்துறை அதிகாரிகள்
நீலகிரி:மாவட்டம் குன்னூர், கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கரடிகளின் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. குறிப்பாக உணவு மற்றும் தண்ணீருக்காகக் குடியிருப்பு பகுதிகளில் உலா வருவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
இந்நிலையில் குன்னூரை அடுத்துள்ள பாரதியார் நகருக்குள் புகுந்த கரடி ஒன்று அங்கிருந்த குடியிருப்பு பகுதியில் வீடுகளின் கதவுகளை உடைத்து அரிசி, கோதுமை, சர்க்கரை, முட்டை உள்ளிட்ட உணவுப் பொருள்களை சாப்பிட்டதுடன் மற்றொரு வீட்டின் உரிமையாளர் வீட்டுக்குள் இருக்கும் பொழுதே கரடி கதவை உடைக்க துவங்கியதாகவும் பொதுமக்கள் கூறுகின்றனர். இது போன்று குடியிருப்பு பகுதிகளில் பல இடங்களில் கரடிகள் வீட்டுக் கதவுகளை உடைப்பது வாடிக்கையாக உள்ளது, இதனையடுத்து அச்சுறுத்தி வரும் கரடியை கூண்டு வைத்து பிடிக்க இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து குன்னூர் வனத்துறை அதிகாரியை தொடர்பு கொண்டு போது அவ்வப்போது கரடி நடமாட்டங்கள் உள்ளது ஆனால் கரடியை கூண்டு வைத்து பிடிப்பது என்பது மாவட்ட வன அலுவலரோ, வனசரர்களோ முடிவு செய்ய முடியாது என்றும் இதற்காக சென்னையில் உள்ள முதன்மை வன உயிரின காப்பாளருக்கு கடிதம் எழுதி இருப்பதாகவும் அங்கிருந்து அனுமதி வந்தால் மட்டுமே கூண்டு வைத்து பிடிக்க முடியும் என்று தெரிவித்தார். விரைவில் குன்னூர் பகுதியில் சுற்றித் தெரியும் கரடியை கூண்டு வைத்து பிடித்து மூலம் மனித விலங்கு மோதலிலிருந்து மனிதர்களைக் காப்பாற்ற முடியும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்து வருகின்றனர்.