Kumbakkarai Falls: 7 நாளுக்கு பிறகு கும்பக்கரை அருவியில் குளிக்க அனுமதி! - kumbakkarai falls video
தேனி:பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவியின் நீர் பிடிப்பு பகுதிகளான மேற்குத் தொடர்ச்சிமலை, வட்ட கானல் மற்றும் வெள்ளகெவி உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து பெய்த கனமழையின் காரணமாக, கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் ஏப்ரல் 28ஆம் தேதி முதல் அருவியில் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி வனத் துறையினர் குளிக்க தடை விதித்து இருந்தனர்.
இந்த நிலையில், கடந்த இரண்டு தினங்களாக நீர் பிடிப்பு பகுதிகளில் மழை பெய்யாத நிலையில், அருவியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு குறைந்து நீர்வரத்து சீராகி உள்ளது. இதனால் இன்று (மே 5) முதல் கும்பக்கரை அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க விதிக்கப்பட்ட தடையை நீக்கி சுற்றுலாப் பயணிகள் குளிக்க வனத்துறையினர் அனுமதித்துள்ளனர்.
எனவே, ஏழு நாட்களுக்கு பிறகு கும்பக்கரை அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதித்ததால், அருவியில் ஆர்ப்பரித்து கொட்டும் நீரில் கோடை வெப்பத்தின் தாக்கத்தை தணிக்க சுற்றுலாப் பயணிகள் காலை முதலே குவிந்து வருகின்றனர். மேலும், நேற்று முதல் அக்னி நட்சத்திரம் தொடங்கி உள்ளதும் குறிப்பிடத்தக்கது.