தொடர்ந்து 5 நிமிடம் தேசபக்தி பாடலுக்கு பரதநாட்டியம் ஆடிய குழந்தைகள்! கின்னஸ் சாதனைக்கு முயற்சி! - வேலூரில் கின்னஸ் உலக சாதனை முயற்சி
வேலூர்:தொடர்ந்து 5 நிமிடங்களுக்கு தேசபக்தி நிறைந்த பாடலுக்கு பரதநாட்டியம் ஆடிய மாணவர்கள், கின்னஸ் உலக சாதனைக்கு முயற்சி செய்தனர். வேலூர் மாவட்டம், வேலூர் கோட்டை வளாகத்தின் உள்ளே அமைந்து உள்ள மைதானத்தில் மணிமேகலா இன்டர்நேஷனல் இன்ஸ்ட்டியூட் ஆஃப் ஆர்ட்ஸ் சார்பில், வரவிருக்கும் நாட்டின் 76 வது சுதந்திர தினத்தை போற்றும் விதமாக தேசபக்தி பாடலுக்கு பரத நாட்டியம் ஆடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்ற குழந்தைகள் தொடர்ந்து 5 நிமிடத்திற்கு பரதநாட்டியம் ஆடி அசத்தினர்.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் ஏ.பி.நந்தகுமார் கலந்து கொண்டார். மேலும், இந்நிகழ்ச்சியில் பங்கேற்க பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் மாணவ மாணவியருக்கும் அழைப்பு கொடுக்கப்பட்டிருந்த நிலையில், வெவ்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த சிறுவர், சிறுமியர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் மொத்தம் 480 பேர் வெள்ளை நிற ஆடை அணிந்து கொண்டு, தேசபக்தி நிறைந்த பாடலுக்கு பரதநாட்டியம் ஆடினர். சிறுவர் சிறுமியர் பரதநாட்டியம் ஆடியதை சுற்றி இருந்த பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் ஆச்சரியத்துடன் கண்டு ரசித்தனர்.