குற்றாலம் மெயின் அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு - சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை..!
Published : Jan 7, 2024, 10:26 AM IST
தென்காசி: தென்காசி மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள குற்றாலம் அருவியில் இன்று (ஜன.7) திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. குற்றாலம் தமிழகத்தில் உள்ள சுற்றுலாத் தலங்களில் மிகவும் புகழ்பெற்றது. அந்த வகையில், மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்த கனமழையின் காரணமாக தற்போது குற்றாலம் மெயின் அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
குற்றாலம் மெயின் அருவி பகுதியில் தடுப்புச் சுவரைத் தாண்டி கடுமையான வெள்ளம் வருவதால், சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி மெயின் அருவியில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி உள்ள பகுதிகளில் வெயிலின் தாக்கம் குறைந்து தற்போது இதமான சூழல் நிலவி வரும் நிலையில், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த கனமழை காரணமாக, தற்போது குற்றால அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், இன்று விடுமுறை தினம் என்பதால் உள்ளூர் மற்றும் வெளியூரிலிருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகளும், ஐயப்ப பக்தர்களும் வருகை தந்து அருவிகளில் குளிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.