உதகை 200: பலூன் திருவிழா தொடங்கியது
நீலகிரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா நகரான உதகை உருவாகி 200 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதனையொட்டி தமிழ்நாடு அரசு 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து, இதன் மூலம் பல்வேறு வகையான நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. அந்த வகையில் ஒரு நிகழ்ச்சியாக, உதகை பர்ன்ஹில் பகுதியில் உள்ள கிரசண்ட் பள்ளி மைதானத்தில், சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் பலூன் திருவிழா நேற்று (மே 20) தொடங்கியது.
பத்து நாட்கள் நடைபெறும் இந்த பலூன் திருவிழாவில், பலூனில் பயணிக்க ஒரு நபருக்கு ஆயிரத்து 600 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து நீலகிரி மாவட்டம், உதகையில் முதல்முறையாக வெளிநாட்டுப் பறவைகளைக் கண்டுகளிக்கும் வகையிலும், அவைகளுக்கு உணவு அளித்து புகைப்படம் எடுத்துக் கொள்ளும் வகையிலும் அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.
ஒரு பறவை சரணாலயத்துக்குச் செல்வது போன்ற புத்துணர்ச்சியுடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த அரங்கினை சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் மற்றும் மாவட்ட ஆட்சியர் சா.ப.அம்ரித் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பார்வையிட்டனர். மேலும், இந்த நிகழ்ச்சியில் கிரசண்ட் பள்ளி தாளாளர் ஃபரூக் உள்ளிட்டப் பலரும் கலந்து கொண்டனர்.